திருப்பத்தூர் அருகே 5 மாத கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாகப் புகார் எழுந்து உள்ள நிலையில், ராணுவ வீரரான கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான மணிவண்ணன், பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சத்யவதனா என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து, தம்பதியர் இருவரும் பஞ்சாபிலுள்ள ராணுவக் குடியிருப்பில் வசித்து வந்தனர். 

கணவன் - மனைவி இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், சத்யவதனா கரு உற்றார். அதன் தொடர்ச்சியாக, சத்யவதனா 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 12 நாட்களுக்கு முன்பு பஞ்சாபிலிருந்து விமானம் மூலமாகத் தம்பதியர் இருவரும் பெங்களூரு வந்து இறங்கி உள்ளனர். அங்கு, உறவினர் வீட்டில் இருந்து விட்டு மறுநாள் சொந்த ஊரான ஆண்டியப்பனூர் பகுதிக்கு அவர்கள் வந்து உள்ளனர்.

ஊர் திரும்பிய நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு சத்தியவதனாவுக்கு வயிற்றில் இருந்த கரு கலைந்து ரத்த உதிரப் போக்கு காணப்பட்டு உள்ளார். இதனையடுத்து, அவரை திருப்பத்தூர் தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் சேர்த்து உள்ளனர். அதன் பின்னர், அவரின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரின் அண்ணன் சதீஷ் மற்றும் உறவினர்கள் அவரை வேலூர் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது அவர் உயிரிழந்து உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்து உள்ள சத்யவதனாவின் குடும்பத்தினர், “சத்தியவதனாவின் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக” கூறி, அவருடைய குடும்பத்தினர் குரிசிலாபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், பிரேதப் பரிசோதனை முடிந்து பிறகு சத்தியவதனாவை வக்கணம்பட்டி தாய் வீட்டில் அடக்கம் செய்து உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே ஒரு முறை சத்தியவதனா கருவுற்று அந்தக் கரு கலைக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள்  புகார் தெரிவித்தனர். இதனால், உயிரிழந்த சத்யவதனாவின் கணவரான ராணுவ வீரரும், அவரின் குடும்பத்தினரும் சத்தியவதனாவை கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டு தற்போது எழுந்துள்ளது. 

குறிப்பாக, சத்யவதனாவின் கருவைக் கலைக்க விஷ இலையைக் கரைத்து ஊற்றியுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

“மருத்துவமனையில் சோதித்துப் பார்த்த பொழுது, பெண்ணின் உடம்பில் ஏற்கனவே விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும்” சத்தியவதனாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அந்த சந்தேகத்தின் அடிப்படையில் தான் பிரேதப் பரிசோதனை ஆய்வு நடைபெற்றிருக்கின்றது. இந்த நிலையில், சத்தியவதனாவின் அண்ணன் சதீஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் ராணுவ வீரரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.