உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பட்டியலின பெண் இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த பெண், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும்  அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் உள்ளதால், அது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்து பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் படி, மற்றொரு பட்டியலின பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் 22 வயது இளம் பெண் ஒருவர், தன் வீட்டில் தனியாக இருந்து வந்து உள்ளார். அப்போது, அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கிராமத் தலைவர் மற்றும் இருவர் அந்த இளம் பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

அவர்கள் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, “இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது என்று, அந்த பெண்ணை அவர்கள் மிரட்டி விட்டு” அங்கிருந்து வெளியேறி உள்ளனர். 

இதனையடுத்து, மாலை நேரத்தில் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் வீடு திரும்பி உள்ளனர். அப்போது, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து அந்த பெண், கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், ஐபிசி சட்டம், பட்டியலின சட்டம் மற்றும் பழங்குடியினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், இந்த பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய  தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இதனிடையே, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஹத்ராஸ் பாலியல் சம்பவத்தை அந்த மாநில மக்கள் மறப்பதற்கு முன்பாக தொடர்ந்து அதே போன்ற தொடர்ச்சியாக அந்த மாநிலத்தில் பாலியல் சம்பவங்கள் அரங்கேறி வருவது, அம்மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமையைக் காட்டுவதாக உள்ளதாக அந்த மாநில சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தால், அந்த மாநிலத்தில் மீண்டும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.