அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷுட்டிங் சென்ற வருடமே பூஜையுடன் துவங்கி நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி டேபிளுக்கு முன் அமர்ந்திருப்பது போலவும், அந்த டேபிளில் தெரியும் பிரதிபலிப்பு வேறொரு விஜய் சேதுபதி போல காட்டப்பட்டுள்ளது. 

முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என்று தெரிகிறது. கட்சி கொடி கொண்ட வேட்டி சட்டை என கேரக்டரில் கச்சிதம் காண்பித்துள்ளார் விஜய்சேதுபதி. விஜய் சேதுபதி இதில் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்றும் அவருக்கு மாஸான காட்சிகள் நிறைய இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

இயக்குனர் டெல்லி பிரசாத் இதற்கு முன்பு பல இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். பாலாஜி தரணிதரன், பிரேம்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்கள் உடன் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

படத்தின் முதல் பாடலான அண்ணாத்தேசேதி பாடல் லிரிக் வீடியோ வெளியானது. கோவிந்த் வசந்தாவின் இசையில் உருவான இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். அறிவு இந்த பாடலை பாடியுள்ளார். பாடல் லிரிக் வீடியோவில் வரும் காட்சிகள் இணையத்தை அசத்தி வருகிறது. இந்நிலையில் படத்தில் நடிகை ராஷி கண்ணா இணைந்துள்ளார். நடிகை அதிதி ராவ் பதிலாக ராஷி கண்ணா இணைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மக்கள் செல்வன் ரசிகர்கள். ஏற்கனவே வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷி. 

தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோக்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து ஒரு குட்டி லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகை டாப்ஸியுடன் ஆனபெல் சுப்ரமணியம் படத்தில் நடித்து முடித்தார். 

தற்போது எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

நேற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதால் முரளிதரனின் விடுத்த அறிவிப்பை ஏற்று விலகினார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. 

மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அமீர்கானுடன் லால் சிங் சத்தா போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.