பாஜக பொதுக்கூட்டத்தில் விவசாயி ஒருவர் மாரடைப்பால் இறந்த பிறகும், பாஜக தொடர்ந்து அந்த பொதுக்கூட்டத்தை நடத்தியதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகக் குற்றச்சாட்டி உள்ளன.

இந்தியாவின் சில பகுதிகளில் பாஜக வின் மூத்த தலைவர்கள் மற்றும் அதன் முக்கிய தலைவர்கள் சிலரின் கருத்துக்களும், அவர்களது செயல்பாடுகளும் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் விவசாயி ஒருவர் மாரடைப்பால் இறந்த பிறகும், பாஜக தொடர்ந்து அந்த பொதுக்கூட்டத்தை நடத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதாவது, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.    

மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள முண்டியில் நேற்று பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஜீவன் சிங் என்ற 70 வயதான விவசாயி ஒருவரும் கலந்து கொள்ள வருகை தந்தார். 

அப்போது, பல நூறு பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் திடீரென குறிப்பிட்ட அந்த விவசாயி மயக்கமடைந்து நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மயங்கி விழுந்த விவசாயி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு ஜீவன் சிங் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக  மருத்துவர்கள் கூறி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதற்கட்ட விசாரணையில் விவசாயி ஜீவன் சிங் மாரடைப்பால் இறந்தார் என்பது தெரிய வந்தது. மேலும், போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும் போது, “பாஜக கூட்டத்தில், விவசாயி இறந்த பின்னரும் தலைவர்கள் தொடர்ந்து உரை நிகழ்த்தினார்கள். பாஜக எம்.பி. சிந்தியா மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் மீதும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பாஜகவின் மனநிலையும் மனித நேயமும் இது தானா?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் கோவிந்த் மாலு கூறுகையில், “விவசாயியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அது குறித்து அறிந்தவுடன் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதாகவும்” குறிப்பிட்டார். 

அதே போல், “விவசாயி இறந்த கூட்டத்தில் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும்” அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பாஜக கூட்டத்தில் விவசாயி இறந்த பின்னரும் தலைவர்கள் தொடர்ந்து உரை நிகழ்த்தியாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.