கூழாங்கல் பட இயக்குநர் வினோத்ராஜ் இயக்கும் அடுத்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியகியுள்ளது.

'கூழாங்கல்' திரைப்படம் மூலம் பி.எஸ்.வினோத்ராஜ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் புதுமுகங்கள் செல்லபாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜெய பார்த்திபன் மற்றும் விக்னேஷ் குமுலாய் ஒளிப்பதிவு செய்துள்ளனர்; கணேஷ் சிவா ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். உண்மைக்கதையை மையக்கருவாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் Asian Film Awards, Asia Pacific screen Awards, Independent Spirit Awards உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இப்படம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் Tiger விருதை வென்றது.

இத்திரைப்படம் இதன் இயக்குநர் வினோத்ராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாகியுள்ளது. மேலும் காட்சிகளின் முக்கியத்துவம் கருதி இப்படத்தின் லொக்கேஷன்களுக்காகவே அதிக நாட்களை இயக்குநர் வினோத்ராஜ் செலவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சூரிய ஒளி இப்படத்தின் கதையில் முக்கியப்பங்கு வகிப்பதால் சூரிய உதயத்திற்குப் பிறகு படப்பிடிப்பை தொடங்கி பிற்பகல் 3 மணிக்குள்ளாக படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், இவரது இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கவிருப்பதாகவும், அதை சிவகார்த்திகேயன் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நகைச்சுவை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவந்த சூரி தற்சமயம் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது.

இப்படத்தை 'RS Infotainment' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் சூரியுடன் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து வித்தியாசமான கதையமைப்பில் உருவாகியுள்ள 'கூழாங்கல்' படத்தை இயக்கிய வினோத் ராஜின் இயக்கத்தில் சூரி நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் உலாவந்தவண்ணம் உள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.