குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், மலையாள படங்களிலும் கவனம் செலுத்துகிறார். தமிழில் அவர் ஹீரோவின் தங்கை, மகளாக நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக உலகநாயகன் கமல் ஹாஸன் மகளாக பாபநாசம் படத்தில் நடித்திருந்தார். ஜில்லா படத்தில் தளபதி விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார். 

கடந்த ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார் நிவேதா தாமஸ். படத்தை பார்த்தவர்கள் நிவேதாவுக்கு தான் வெயிட்டான கதாபாத்திரம், அதை உணர்ந்து அவர் நடித்திருக்கிறார் என்றார்கள். தன் நடிப்பால் ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தார் நிவேதா.

நிவேதா தாமஸ் தற்போது நடித்துள்ள படம் வக்கீல் சாப். பிங்க் ரீமேக்கான இந்த படத்தில் பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தில் ராஜூ மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்து நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். பத்திரமாக இருங்கள்... பாதுகாப்பாக இருங்கள்...மாஸ்க் அணியுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் நிவேதா. 

கொரோனோ தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போடுவது வாடிக்கையாகி உள்ளது. இன்று காலை தான் நடிகை கௌரி கிஷனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.