சின்னத்திரையின் மூலம் என்ட்ரியாகி தற்போது சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக உயர்ந்திருப்பவர் நடிகர் பிரேம்குமார். விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளர் பிரேம்தான். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சூர்யாவுடன் சிங்கம்3 மற்றும் காப்பான், விஜய்சேதுபதி மற்றும் மாதவனுடன் விக்ரம் வேதா, தளபதி விஜய்யுடன் சர்கார் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

தற்போது XB தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் பிரேம்குமார். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த லாக்டவுனில் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

இந்நிலையில் நடிகர் பிரேம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் யோகா பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவில் யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். வளைந்து கொடுக்கும் தன்மை உடம்பில் அதிகரிக்கும், செரிமான பிரச்சனை சரியாகும், முதுகு மற்றும் கணுக்கால் பலப்படும் போன்ற நன்மைகள் ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார் பிரேம். 

லாக்டவுனில் பல திரைப்பிரபலங்கள் தங்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்யும் முறைகள் பற்றி ரசிகர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர். நடிகர் பிரேமின் இந்த பதிவு நிச்சயம் ரசிகர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படத்தில் தளபதி விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார் பிரேம். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் எந்த மாதிரி கேரக்டரில் நடித்துள்ளார் என்ற ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள்.