உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டி உள்ளது.  

உலகம் முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று. இதனால், நோய் பாதிப்பு, உயிரிழப்பு, உலக பொருளாதார வீழ்ச்சி என மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக வல்லரசு நாடான அமெரிக்கா தான் மிகப் பெரிய பாதிப்பை சந்திந்துள்ளது. அமெரிக்காவில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 47,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 25,53,068 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் தொற்றால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,27,640 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் கொருானா வைரஸ் தொற்று 47,000 யை நெருங்கியது. அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 12,80,054 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56,109 ஆக உயர்ந்துள்ளது. 

பட்டியலில் 3 வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் இதுவரை 6,27,646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 8,969 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியில் இந்தியா தற்போது 4 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 5,10,672 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 15,712 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் 3,09,360 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43,414 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இதுவரை 2,94,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,338 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 9,998,220 தாண்டி, ஒரு கோடியை நெருங்கி வருகிறது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனா வைரசிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இதுவரை 53,52,383 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், உலகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்தது காணப்பட்ட பல நாடுகளில் மீண்டும், இரண்டாவது அலையாக கொரோனா பரவத் தொடங்கி இருப்பது மருத்துவ வல்லுநர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

சீனா உட்பட சில நாடுகளில் கடந்த 2 மாத காலமாக கொரோனா வைரஸ் தொற்று, சற்று குறைவாகக் காணப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியதாகக் கூறப்படும் சீனாவிலும், பெய்ஜிங் நகரில் தற்போது புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஈரான் நாட்டில் நாள் தோறும் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்நாட்டில் ஒரே நாளில் 100 பேர் உயிரிழந்தது, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது வைரஸ் தொற்று பரவல், அந்நாட்டில் 2 வது வது அலையாக மாறிவிடுமோ என்று, அந்நாட்டு மக்கள் கவலைக்குள்ளாகி உள்ளனர்.

இஸ்ரேல் நாட்டிலும் புதிதாக கொருானா வைரஸ் தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இஸ்ரேல் நாட்டில், கடந்த ஏப்ரல் மாதம் அதிகரித்துக் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, மே மாதத்தில் சற்று ஓய்ந்திருந்தது. ஆனால், அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கடந்த சில நாட்களாக அந்நாட்டில் தினமும் 500 பேருக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், சவுதி அரேபியாவில் மே மாதம் இறுதியில் குறைவாகக் காணப்பட்ட கொரோனா, தற்போது 2 ஆம் அலை வீசத் தொடங்கி உள்ளது. அந்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,500 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஐரோப்பாவின் போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளிலும், கொரோனா வைரசின் 2 வது அலை மீண்டும் தொடங்கி இருப்பது உலக நாடுகளை மீண்டும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.