பாப் இசை பாடல்கள் பாடுவதில் வல்லவரான கருணாஸ், பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் மூலம் புகழ் பெற்ற அவர் பிதாமகன், வசூல் ராஜா, பாபா, பொல்லாதவன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பின் விநியோகஸ்தராக பல படங்களை வாங்கி சில மாவட்டங்களில் வெளியிட்டு இருக்கிறார் கருணாஸ். அதன் பிறகு திண்டுக்கல் சாரதி என்ற படத்தை எடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

அரசியலில் களமிறங்கிய கருணாஸ்  தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். சமீப காலமாக சினிமா துறையினர் பலரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கருணாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கருணாஸ் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. கருணாஸின் உடல்நிலை குறித்து அவரது மகன் நடிகர் கென் கருணாஸ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பாவுக்கு குரோனா பாசிட்டிவ் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் அரசியல்வாதி மற்றும் சமூக சேவைகள் செய்து வருகிறார். அவர் தன்னுடைய தொகுதிக்கும் மற்ற இடங்களுக்கும் கடந்த சில தினங்களில் சென்று வந்திருக்கிறார். அதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. 

அவர் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். அவரது உடல் நிலை பற்றி கேட்டு வரும் மெசேஜ்கள் மற்றும் போன் கால்களுக்கு நன்றி. 

கடந்த சில தினங்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் நீங்களே சென்று டெஸ்ட் எடுத்துக் கொண்டு தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். இது என் பணிவான வேண்டுகோள். தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். விட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். அவசர தேவை இருந்தால் மட்டுமே வாருங்கள். ஏனென்றால் இது உங்களது குடும்பத்தின் உடல் நலத்தை பாதிப்பது மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என பதிவு செய்துள்ளார். 

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் கென். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. தனுஷின் மகனாக கென் கருணாஸ் அந்த படத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில தினங்களில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது கூடுதல் தகவல். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🙏🏽

A post shared by Ken Karunaas (@ken_karunaas) on