இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பானது அதிகரித்துக் கொண்டே போகின்றது. 10,000 - 20,000 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டிருந்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போதெல்லாம் 60,000 என்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விளைவு, நேற்றைய தினம் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்தது.

மத்திய அரசு, கொரோனாவை சரியாகக் கையாளவில்லை என்றும், அதன் விளைவாகத்தான் இன்றைக்கு இந்தளவுக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் திமுக சார்பில், தினந்தோறும் ஏதேனும் ஒரு குறைபாடு மாநில அரசின் பார்வைக்கு வைக்கப்பட்டு விடுவதைப் போல, மத்தியில் ஆளும் அரசை எதிர்த்துக் கேட்கிறது காங்கிரஸ் அரசு.

அப்படி கடந்த மாதம் முன், காங்கிரஸ் அரசு சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விரைவில் இந்த எண்ணிக்கை 10 லட்சத்தை அடையும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல, நடந்தது. எண்ணிக்கை, பத்து லட்சம் என்றானவுடன், ராகுல் காந்தி மற்றொரு எச்சரிக்கையை விடுத்தார். அதில் இந்தியாவில் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை  20 லட்சத்தைத் தொடக்கூடும் என்று கூறி எச்சரித்திருத்திருக்கிறார் ராகுல் காந்தி.

ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டிருந்த அந்தப் பதிவில், ``நாட்டில் இதே வேகத்தில் கொரோனா தொற்று பரவல் இருந்தால், ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்தியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவர் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆதலால் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க உறுதியான திட்டத்தை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டியது அவசியம்" என அவர் வலியுறுத்தினார்.

கொரோனா நேரத்தில், பொருளாதாரம் சார்ந்தும் இந்தியா பின்னடைந்து இருப்பதால், அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார் ராகுல் காந்தி.

இந்நிலையில், நேற்று நிலவரப்படி, அதற்கு முந்தைய கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டிருந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19.65 லட்சமாக அதிகரித்திருந்தது.

அப்படியான சூழலில், இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 62,538 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. 

ராகுல் சொன்ன தேதிக்கு முன்னதாகவே நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பது, கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மற்றொமொரு ட்வீட் செய்துள்ளார். அதில், 'நாட்டில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்துவிட்டது. முன்னதாக, தான் எச்சரித்தை மோடி அரசு கவனிக்கத் தவறி விட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்துள்ளது. மோடி அரசைக் காணவில்லை' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவை பொறுத்தவரையில், இவ்வளவு வேகமாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க, பரிசோதனைகள் அதிகரித்தது தான் காரணமே தவிர, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என இதை பொருள் கொள்ள வேண்டாம் என்ற கருத்து எதிர்த்தரப்பில் முன்வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால், இன்னும்கூட கொரோனா பாதிப்பானது வரும் நாள்களில் அதிகரிக்கும் என்றே கணிக்கப்பட்டு வருவது, இன்னும் ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.