தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிடுவதற்கும், புதிய திட்டங்களை துவக்கி வைப்பதற்கும் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், நெல்லையில் ரூ. 196.75 கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டங்களை துவக்கி வைத்தார். ரூ. 78.77 கோடியில் தென்காசி மாவட்டத்துக்கு என்று சிறப்பு திட்டங்களை துவக்கி வைத்தார். 

இதையடுத்து, இந்த மாட்டங்களுக்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டரிம் கொரோனா பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின் முதல்வர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக,இதுவரை ரூபாய் 103 கோடியில் 500 ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது என்றுகூறி மேலும் பேசியவ முதல்வர்,

“இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவிலான கொரோனா பரிசோதனைகள் அதிகமாக நடைபெற்றுள்ளது. தரமான சிகிச்சையும், தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் ரூ.1000 கோடியில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகளை கட்டப்படுகிறது. 

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்ர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது. நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் பத்திரமாக ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” என அரசின் பணிகள் குறித்து கூறினார்.

இதன்பின் மகளிர் சுய உதவிக்குழு, சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு, விவசாய சங்கங்களோடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் ``நெல்லை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன" என்றும், ``கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.நெல்லை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன.நெல்லை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கம்.நெல்லையில் மிகப்பெரிய உணவுப் பூங்கா அமைக்கப்படுகிறது.இ - பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பில்லை" என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக முதல்வரை திருநெல்வேலியில் வரவேற்பதற்கான பட்டியலில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன் பெயர் இடம் பெற்று இருந்தது. இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டத்தை அடுத்து சிகிச்சையில் இருக்கிறார். இதேபோல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவீந்திரன் மற்றும் கொரோனா வார்டில் சிறப்பு அதிகாரியாக இருக்கும் முன்னாள் டீன் கண்ணன் ஆகியோருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவருக்கும் சிகிச்சையில் இருக்கின்றனர்.