மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு, சில தினங்களுக்கு முன் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், `ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால், முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

அறிவிப்பை தொடர்ந்து, போயஸ் கார்டன் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அதற்கான பணிகளை மேற்கொண்டது. நினைவு இல்லமாக மாற்ற, வீட்டைக் கையகப்படுத்துவதற்காக அதன் இழப்பீடு தொகையான ரூ. 67.90 கோடியை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.

இதன் ஒருபகுதியாக வேதா இல்லத்தை அரசுடமையாக்குவதற்கான அரசாணை கடந்த ஜூலை 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், போயஸ் கார்டன் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருந்தது

இப்படியான சூழலில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஊடகங்களில், `ஜெயலலிதாவின் வாரிசாக எங்களை நீதிமன்றமே அறிவித்துள்ள நிலையில் எங்களுக்கே உரிமை உள்ளது. ஆகவே ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கேட்பேன். ஜெ.வின் வேதா இல்லம் மக்களுக்கு போய் சேராது; இது எங்கள் பூர்வீக சொத்து. ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை தொடங்க எங்களை அணுகியிருந்தால் நாங்கள் ஒப்புதல் அளித்திருப்போம். ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவது தொடர்பாக சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்" என்று கூறியிருந்தார். 

தீபா சார்பில், இழப்பீடு நிர்ணயித்துப் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை எடுக்கவும் எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மனுவில், அரசின் இழப்பீட்டுத் தொகையில் இருந்து வருமான வரி பாக்கியை எடுக்க வருமான வரித் துறைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு இன்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தது. அப்போது, ``இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை. தனியார் நிலத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு உரிமை சட்டப்படி உரிமையில்லை” என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், ``நிலம் கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து, போயஸ் வீட்டு சாவியைக் கேட்டு தீபக் தொடர்ந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணையில் இருப்பதாகவும், அதே அமர்விற்கு தீபாவின் வழக்கை மாற்றுவதாகவும் நீதிபதி பரிந்துரைத்தார். அதுவரை அசையும் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தீபா தரப்பு வலியுறுத்தியது.

இதில், ``ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, எங்கிருந்தீர்கள் நீங்கள்?" என தீபாவிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையையும் நிராகரித்தார்.