வேலூர் அருகே “பெற்றோர் குடித்துவிட்டு தொல்லை தருகிறார்கள்” என்று கூறி, 14 வயது சிறுமி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - கீதா தம்பதியினர், அந்த பகுதியில் பழைய பொருள்களைச் சேகரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். 

இந்த தம்பதிக்கு 4 பெண் பிள்ளைகள், 2 ஆண் பிள்ளைகள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர். ஏற்கனவே மதுவுக்கு அடிமையாக இந்த மாரிமுத்து, தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, மதுவை வீட்டிற்கு வாங்கி வந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.

அப்படி, வீட்டிற்கு மது வாங்கி வரும் போது, தொடக்கத்தில், தன் மனைவி கீதாவிற்கும் மாரிமுத்து கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு, மனைவி கீதாவும் மதுவுக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கணவன் மனைவிகளான மாரிமுத்து - கீதா இருவருமே சேர்ந்தே தினமும் மது குடிக்கத் தொடங்கினர். இதனால், தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் அவர்கள் கவனிக்கத் தவறியதாகத் தெரிகிறது.

மேலும், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து மது குடித்த பிறகு, மது போதையில் திண்டாடும் அவர்கள், வீட்டில் உள்ள பெண் குழந்தைகளைத் தினமும் துன்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதைப் பொருத்து பொருத்துப் பார்த்த அவர்களது 14 வயது மகள் ஒருவர், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து, குடிப் பழக்கத்தில் இருக்கும் பெற்றோர் தரும் தொல்லைகள் தாங்க முடியாமல், அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுமியை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “பெற்றோர் குடித்து விட்டு குழந்தைகளுக்குத் தரும் தொல்லைகள்” தெரிய வந்தது.

இதனையடுத்து, தற்கொலைக்கு முயன்ற சிறுமியை, வேலூர் மாவட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு சிறுமியிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அப்போது, “எனக்கு வீட்டிற்குச் செல்ல விருப்பம் இல்லை” என்று சிறுமி கூறி உள்ளார். 

இதன் தொடர்ச்சியாக, மாவட்ட சமூக நலத்துறை சார்பில் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

மேலும், “மீட்கப்பட்ட சிறுமி உட்பட 6 குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பல மாதங்களாக வீட்டில் சும்மாவே இருப்பதும்” விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மற்ற 5 குழந்தைகளையும் காப்பகத்தில் சேர்ப்பது தொடர்பாக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.