கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். உலகம் முழுவதும் நடக்கின்ற நிகழ்வுகள் மற்றும் கொரோனா பாதிப்புகள் குறித்தான தகவல்கள் என அனைத்தையும் சமூகவலைத்தளங்கள் வழியாகத்தான் மக்கள் கண்டு வருகின்றனர். இக்கொரோனா காலத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் இதனால் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. 

`உலகளாவிய பெருந்தொற்று’ என்று உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு உலக அளவில் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களின் பயன்பாடு பெருகிவிட்ட இந்தச் சூழலில், அவற்றில் பரவும் தகவல்களின் உண்மைத் தன்மையை சோதித்த பின்னரே அதை மற்றவர்களுக்குப் பகிர்தல் ஒவ்வொருவரின் கடமை. இதுபோன்ற நெருக்கடி காலங்களில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் குவியத் தொடங்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். 

இந்நிலையில் மக்களை அச்சுறுத்தக்கூடிய வகையில் கொரோனா குறித்தான பல்வேறு போலியான தகவல்களைக் கட்டுப்படுத்த அனைத்து சமூகவலைத்தள நிறுவனங்களும் தாமாகவே முன்வந்திருக்கின்றன. குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு காணொளியை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் "கொரோனா குழந்தைகளை எளிதில் தாக்காது, அவர்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்றும் பெற்றோர்களுக்கு அவர்கள் மூலம் பரவ வாய்ப்பில்லை" என்றும் கூறியிருந்தார். உலக சுகாதார நிறுவனம் குழந்தைகள் மூலம் நோய்ப் பரவ வாய்ப்பிருக்கிறது என முன்னர் குறிப்பிட்டிருந்தது. எனவே ட்ரம்ப் பதிவினை பலரும் கண்டித்தனர். ட்ரம்ப் கூறியது தவறான தகவல் என்பதை உறுதிசெய்துவிட்டு முகநூல் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் அந்தப் பதிவை அதிரடியாக நீக்கியுள்ளன. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு, இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் சுமார் 50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சத்து சொச்சம் பேர் அங்கு மட்டும் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தநிலையில் தான் ட்ரம்ப் இப்படியொரு பதிவை போட்டிருக்கிறார். தேர்தல் பிரசார ட்விட்டர் கணக்கில் இதை பதிவிட்டிருந்தார் ட்ரம்ப். பள்ளிகள் திறக்கலாம் என்றும் டிரம்ப் வீடியோவில் தெரிவித்திருந்தார். அவரது கருத்து முற்றிலும் தவறானது என மருத்துவ நிபுணர்கள் அறிவித்தனர். இருந்தபோதிலும் அவர் அதை வலுயுறுத்திக் கொண்டே இருப்பது, அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் 6.32 லட்சம் குழந்தைகள், 39 லட்சம் முதியவர்களை கொரோனா தாக்கி இருப்பது உலக சுகாதார நிறுவனத்தின் சர்வேயில் தெரியவந்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1.84 கோடி. பலியானோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 96 ஆயிரத்து 147 ஆகும். ஜன., முதல் ஜூலை இறுதி வரை 1.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களை வைத்து உலக சுகாதார நிறுவனம் ஒரு சர்வே மேற்கொண்டது. அதன் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 53 சதவீதம் ஆண்களும், 47 சதவீதம் பெண்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். 14 வயதிற்குட்பட்ட 6.32 லட்சம் குழந்தைகளை கொரோனா தாக்கி இருக்கிறது. இதில் 4 வயதிற்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 2.05 லட்சம். 25 முதல் 64 வயதிற்கு உட்பட்டவர்கள் 64 சதவீதம். இவர்கள் மட்டும் 1.09 கோடி பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். 65 வயதை கடந்த முதியவர்கள் 39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 5.81 லட்சமாகும்

குழந்தைகள் விஷயத்தில், தயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீர்கள் என்பதே, உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய மிகப்பெரிய கோரிக்கை!