கொரோனா பரவல், ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், கொரோனா பரவலுக்கான இடங்களை அரசும் கன்டறிந்து, ஆங்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், அரசு ஒருசில இடங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையும், ஆங்கெல்லாம் மக்கள் குரல் எழுப்பும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது.

அப்படியான ஓர் இடமாக, வடசென்னை பகுதி "நோய் தொற்று மையமாக மாறி வரும் மொழிப்போர் தியாகிகள் மயானம்" மாறி வருகிறது. அப்பகுதி மக்களின்  நலன் மீது `அக்கறையற்ற சென்னை மாநகராட்சி' என்று கூறி பெயரில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் சார்பாக இன்றைய தினம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கோரிக்கையில் வரும் தகவல்கள் பின்வருமாறு -

``வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் ஏழைத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியான வடசென்னையை மத்திய சென்னை பகுதியோடு இணைப்பதில் மூலக்கொத்தளம் பகுதியும், பேசின் பாலமும் மிகப்பெரிய பங்காற்றி  வரும் பகுதிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை வடசென்னை தீண்டத்தகாத பகுதியாகவும், சமூக விரோதிகள் வாழ்கின்ற பகுதியாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது.

மூலக்கொத்தளம் பகுதியில் அமைந்துள்ள பேசின்பாலம் தற்போதைய வாகன நெரிசல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக்குவரத்து நெரிசல்களால் சிக்கி தவித்து வருவது ஒருபுறம் என்றால், இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று மடிந்த மொழிப்போர் தியாகிகளான திரு. தாளமுத்து, திரு. நடராசன் மற்றும் தமிழ்மொழி உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய மருத்துவர். தர்மாம்பாள் ஆகியோரது கல்லறைகள் அமைந்துள்ள 125ஆண்டுகால பாரம்பரியமிக்க மயானத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் அம்மயானம் சிதிலம் அடைந்து  சுற்றுச்சூழல் மாசுக்கு சவால் விடும் அளவிற்கு சீரழிந்து வருவதோடு, மயானத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் தகர்க்கப்பட்டு இரவு நேரங்களில் சமூகவிரோதகளின் கூடாரமாகவும் மாறி மூலக்கொத்தளம்  சுற்றுவட்டார பகுதிகளின் நோய் தொற்று மையமாகவே அந்த மயானம் மாறி வருவது கவலையளிக்கிறது.

மேலும் அந்த மயானத்தில் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டவர்களின் மண்டை ஓடுகளும், மனித எலும்புகளும் ஆங்காங்கே குப்பைகள் போல குவிந்தும், சிதறிக் கிடப்பதும், புதைக்கப்பட்ட சடலங்களின் எழும்புக் கூடுகள் மயானப் பகுதியின் உள்வெளியில் கிடப்பதும் கடும் அதிர்ச்சியளிக்கிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 35.43 ஏக்கரில் அமைந்திருந்த மயானத்தின் ஒருபகுதியில் 11.51 ஏக்கரில் அங்குள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சுமார் 138.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் கட்டி வழங்கப்பட்டது. தற்போது அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் மயானத்தில் குட்டை போல் தேங்கி கொசுக்களின் உற்பத்தி மையமாகவும் மாறி வருவதை "கோவிட்-19" பெருந்தொற்று காலத்தில் கூட மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாதது வேதனைக்குரியது.

வடசென்னை பகுதியில் இருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஆளுங்கட்சியின் பிரபலமான தலைவர்கள் பலர் இருந்தும் கூட அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வடசென்னை மக்களின் உடல் நலன் மீது அரசுக்கும், அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இல்லை என்பதையே எடுத்துக்  காட்டுகிறது.

சென்னையில் பல்வேறு மயானங்களில் பூங்காக்கள், கான்கிரீட் சாலைகளோடு ஓய்வறைகளும் அமைக்கப்பட்டு முன் மாதிரி மயானங்களாக திகழும் போது மொழிப்போர் தியாகிகள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மூலக்கொத்தளம் மயானத்தை சென்னை மாநகராட்சி முறையாக பராமரிக்காதது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ஏற்கனவே வடசென்னை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் அந்த பகுதி சுற்றுவட்டாரங்களில் வசிக்கின்ற மக்கள்  பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இன்றளவும் இனனல்களை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி எரிவாயு, எண்ணெய் நிறுவனங்களால் நிலத்தடி நீரில் எண்ணெய் படலங்கள் படிந்து அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலுமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே வரிசையில் வடசென்னை பகுதியில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கி மற்றொரு நோய் தொற்று மையமாக மாறி வரும் மூலக்கொத்தளம் மயானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் நேரிடையாக சென்று கள ஆய்வு செய்வதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக, கட்டட கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காக மாறியுள்ள அம்மயானத்தை சுற்றி உயரமான சுற்றுச்சுவர் எழுப்பி, தூய்மைப்படுத்தவும், மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகள் உள்ளிட்ட அனைத்து கல்லறைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவற்றை பாதுகாத்திடவும், மயானத்தின் பயன்பாடற்ற பகுதியில் மரக்கன்றுகள் நட்டு, தோட்டம்,, பூங்கா, பொதுக்கழிப்பிடம், விளையாட்டுத்திடல் அமைத்து அம்மயானத்தை முன்மாதிரி மயானமாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்று சொல்லப்பட்டுள்ளது.

அரசு விரைந்து இதில் கவனம் செலுத்தும் என நாமும் நம்புவோம்!