பழனி தேவாங்கர்‌ தெருவில் உள்ள வீடுகளின் முன்பு மனித தலை மற்றும் கால்களின் எலும்புக் கூடுகள் இருந்ததால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி 
அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் உள்ள தேவாங்கர் தெருவில் தான், இப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.

தேவாங்கர் தெருவில் 100 க்கணக்கான வீடுகள் அமைந்துள்ளன. இரவில் நன்றாகத் தூங்கிவிட்டு அதிகாலையில் அந்த தெரு மக்கள் எழுந்து தங்கள் விட்டு வாசலில் கோலம் போட்டு தண்ணீர் தெளிக்க வீட்டு வாசலுக்கு வந்துள்ளனர். 

அப்போது, அந்த தெருவில் உள்ள சிலரது வீடுகளில் மனித தலை மற்றும் கால்களின் எலும்புக் கூடுகள் இருந்துள்ளதைக் கண்டு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த மண்டை ஓட்டின் எலும்புக்கூட்டில் குங்குமம் வைக்கப்பட்டு இருந்தது. 

இதனால், வேண்டும் என்றே யாரும் மந்திரித்து, இப்படி வைத்துள்ளார்களா என்ற பீதியும் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. இதனால், பயந்துபோன அப்பகுதி மக்கள், அங்குள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அங்கு வந்த போலீசார், அந்த எலும்புக்கூடுகளைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவற்றை அப்புறப்படுத்தினர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள பலரிடமும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது, மந்திரவாதிகளின் செயலா அல்லது சம்மந்தப்பட்ட வீடுகளுக்கு வேண்டாதவர்களின் செயலா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி மிரட்டி வரும் நிலையில், பழனியில் இப்படி வீடுகளின் முன்பு மனித தலை மற்றும் கால்களின் எலும்புக் கூடுகள் வைக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

போலீசார், என்னதான் விசாரணை மேற்கொண்டு வந்தாலும், இது போன்ற மந்திர தந்திர விசயங்களுக்கு இயல்பாகவே பொதுமக்கள் மத்தியில் பீதி எழுவது இயல்பான ஒரு விசயம். அது போலவே, அந்த பகுதி மக்கள் தற்போது கடும் பயத்தில் உரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.