சசிகலா.. இந்த பெயர்தான் தேர்தலுக்கு முன் அதிகமாக தொலைக்காட்சியிலும், ஊடகங்களிலும், நாளேடுகளிலும், மக்கள் மத்தியிலும், ஆளும் அதிமுக தரப்பிலும் எதிர்க்கட்சி முகாம்களிலும் பேசப்பட்ட பெயர். தமிழகத்தில் தேர்தல் புயல் தற்போது சற்று ஓய்ந்துள்ளது. அதான் சசிகலாவே அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டாரே இப்போது இவரைப்பற்றி பேச என்ன அவசியம் என்று ஐயம் அனைவர் மனதிலும் தோன்றலாம்.


தமிழில் ஒரு பழமொழி உண்டு – “ விழுந்தால் சிரிப்பான், வறண்டால் ஒதுங்குவான்” என்று, சசிகலா விவகாரத்தில் நடந்ததும் அதுவே. சசிகலா வீழ்ந்துவிட்டார் என்று பலரும் சிரித்தனர், சின்னமா வறண்டுவிட்டார் என்று பலரும் அதிகார மமதையில் ஒதுங்கினர். அண்ணா திமுகவின் முகமும் முகவரியுமாக, ஆதியும், அந்தமுமாக இருந்த ஜெயலலிதாவிற்கு நகமும் சதையுமாக இருந்தவர்தான் சசிகலா. அதிமுக அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்த பெரும்பாலான அமைச்சர்கள் சின்னம்மா சின்னம்மா என்று சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர்களே. ஏன், முதல்வர் பழனிச்சாமியே சசிகலாவின் ஆசியுடன்தானே அரியணை ஏறினார். 


டிசம்பர் 5 ,2016ல் ஜெயலலிதா மறைந்தார். ஜெயலலிதா சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருந்தது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம். 


ஜெயலலிதா மறைந்துவிட்டதால், தண்டனை அனுபவிக்கவில்லை ஆனால் சசிகலா உட்பட இருவரும் சிறை தண்டனை அனுபவித்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி எந்த ஏணியைப் பிடித்து மேலே ஏறினாரோ அதே ஏணியை உடைத்தார், எந்த தோணியைப் பிடித்து கரை சேர்ந்தாரோ அந்த தோணியையே துவம்சம் செய்தார். சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தார். 


அதற்கான கைங்கரியங்களை கச்சிதமாக செய்து முடித்தார். அவருக்கு இந்த விவகாரத்தில் மூளையாக இருந்து செயல்பட்டவர்தான் சுனில் கனுகோலு. கட்சிக்குள் இரட்டை தலைமை இருந்தால் நன்றாக இருக்காது என்று சொல்லி, “ இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர் “ என்று சூட்டைக் கிளப்பியதே இந்த சுனில்தான். 


மேலும், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் சசிகலாவை கட்சிக்குள் சேர்த்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று மூத்த அமைச்சர்கள் சொல்லியும் அதை எடப்பாடி காது கொடுத்தே கேட்காததற்கு முக்கிய காரணம் இந்த சுனில் தான் என்கிறார்கள். 


ஆனால் தொலைக்காட்சி விவாதங்கள், உளவுத்துறை ரிப்போட் என அனைத்தையும் முதல்வர் தன் சுயநலத்திற்காக உதாசீனப்படுத்தினார்.


எங்கே சசிகலா மீண்டும் வந்துவிட்டால் சிசிக்கு எடப்பாடி செய்த துரோகத்தை மனதில் வைத்துக்கொண்டு எடப்பாடியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் என்று நினைத்துத்தான் அனைத்து தகிடுதத்த வேலைகளையும் செய்தார். ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது ஒன்று  நடந்தது மற்றொன்று.


சசிகலா ஜனவரி 27 2021 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டார் என்ற செய்தி அறிந்த உடனேயே தமிழகம் பரபரக்கத் துவங்கியது. அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் தோட்ட இல்லம் , ஜெயலலிதா நினைவகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

 ஒருபடி மேலே போய், 98 கோடு ரூபாய் செலவில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவகம் அவசர அவசரமாகப் பராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது என்று அரசு அறிவித்ததும் வரலாற்றில் இதுவே முதல்முறை. ஒரு தனி மனிதருக்காக அரசாங்கமே அஞ்சியது.  அதிமுக அலுவலகம் மட்டுமல்ல திமுக தரப்பும் சற்று பதற்றமாகத்தான் இருந்தது. சசிகலா பெங்களூரிலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்தார். சாலை நெடுகிலும் தொண்டர்கள், வரவேற்புகள் என கலைகட்டியது. 


அதிமுக கொடியுடன் காரில் வந்தார். நடுவில் காவல்துறையினர் கொடி கட்ட அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கவே , அதிமுக நிர்வாகியின் கொடி கட்டிய காரில் சென்னை தி.நகர் இல்லம் வரை பவனி வந்தார். அவர் ஓசூரிலிருந்து சென்னை வரை வருவதற்கு 23 மணி நேரமானது. 23 மணி நேரப் பயணம் ,தொண்டர்கள் அணிவகுப்பு என மிரளவைத்துவிட்டார். 

தொடர்ந்து நிர்வாகிகளும், தொண்டர்களும், முக்கிய பிரமுகர்களும், சில அமைச்சர்களும் கூட சசிகலாவைச் சந்தித்தனர். தேர்தல் நெருங்கியது. தமிழகமே சசிகலா என்ன செய்யப்போகிறார் என காத்திருந்தது. அவர் இந்த நேரத்தில் ஏதேனும் செய்தால் அது அதிமுகவின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும், ஒரு பிளவு ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். சரி. போகட்டும். கழகம் வெல்லட்டும். என்று யாரும் எதிர்பாராத அமானுசிய முடிவை எடுத்தார். மார்ச் 3ம் தேதி சசிகலா தான் அரசியலிலிருந்தே ஒதுங்குவதாக அறிவித்தார். 

அந்த அறிவிப்பிற்கு பின்னர் 1000 அர்த்தங்கள் ஒளிந்திருந்தன. சசிகலாவை கட்சியில் சேர்க்காமல் தேர்தலைச் சந்திப்பது அதிமுகவிற்கு பலம் சேர்க்காது என்பதை நன்கு உணர்ந்திருந்தார் சசிகலா. அதனால் அப்போது ஒதுங்கினார். தேர்தல் முடிந்தது. அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஆருடம் செய்தனர். அப்படி திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால், சசிகலா நினைத்தப்படி கட்சியை கைப்பற்றுவார். 

ஏனெனில் அதிமுக அடிமட்ட தொண்டனின் மனதில் சசிகலாவால்தான் அதிமுகவை வழிநடத்தமுடியும் என்ற எண்ணக் கருத் தரித்துள்ளது, தேர்தல் முடிவிற்கு பின்னர் அதிகார நாற்காலியில் நர்த்தனம் செய்தவர்கள் சசிகலாவால் வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றப்படுவர். அதிமுக தேர்தலை அணுகிய முறையிலேயே தொண்டர்கள் இதை உணர்ந்துவிட்டனர்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக அதிகாரத்தின் உச்சத்தில் வரும் வேளையில், எதிர்த்து அரசியல் செய்வதற்கு முந்தும் தமிழ் தேசியம் பேசும் சீமானையும், மய்ய அரசியல் பேசும் கமலஹாசனையும் சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியலில் முன்னேறப்போகிறார் சசிகலா என்பதே கற்றறிந்த அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கிறது. 

- அஜெய் வேலு