ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் நடிகையான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி எனும் பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கையிலான காட்சிகள் இப்படத்தில் காட்டப்பட்டுளாது.  இந்த படத்தில் எம்.ஜி.ஆர்-ஆக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். கெட்டப் பலரை வாய் பிளக்க செய்துள்ளது. 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தாக தலைவி திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் கடந்த வருடமே கிட்ட தட்ட முடிவடைந்தது. ஜூன் 26, 2020 தலைவி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று, லாக் டவுன் போன்ற காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோடப்பட்டது.

படத்தின் நாயகி கங்கனா ரணவத் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் தலைவி படத்தின் ட்ரைலர் வெளியானது. தமிழ் மற்றும் இந்தி மொழியில் தலைவி ட்ரைலர் வெளியான நிலையில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் ஹிந்தி ட்ரைலரில் மட்டும் இடம்பெற்றிருந்தது இணையத்தில் வைரலானது.

படத்தின் ட்ரைலர் வெளியான போதே ரிலிஸ் தேதி ஏப்ரல் 23 என உறுதியானது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து வேகமாக பரவி வருவதால் திரையரங்குகளில் 50 % இருக்கைகள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழு படத்தை மீண்டும் தள்ளிப்போடுவதாக அறிவித்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.