சென்னையில் வீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்ணை, டாக்டர் உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகள் 27 வயதான பிரியா என்ற இளம் பெண், தாம்பரம் சி.டி.ஓ காலணியைச் சேர்ந்த 28 வயதான டாக்டர் தீபக் என்பவரின் வீட்டில், வீட்டு வேலை செய்து வந்து உள்ளார்.

எப்போதும் போலவே, வழக்கம் போல் பணி நிமித்தமாக காலையில் அந்த வீட்டிற்கு இளம் பெண் பிரியா சென்று உள்ளார். அங்கு, அந்த பெண் வீட்டு வேலைகளை செய்துக்கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது தனியாக இருந்த அந்த பெண் மீது சபலப்பட்ட டாக்டர் தீபக், மற்றும் அவரது உறவினர் 34 வயதான ஆனந்த் அமிர்ராஜ் இருவரும் சேர்ந்து, பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்த பாலியல் பலாத்கார முயற்சியில் அந்த இளம் பெண்ணுக்கு அவர்கள் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்து, அவர்களிடம் இருந்து போராடி எப்படியோ விடுபட்டு உள்ளார்.

இதனையடுத்து, “இது பற்றி வெளியே கூறினால், எங்கள் வீட்டில் நகை திருடிவிட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவோம்” என்று, டாக்டர் தீபக், வௌமிரட்டியாகவே மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், பயந்து போன இளம் பெண் பிரியா, அங்கிருந்து சரி சரி என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்த அவர், தனது குடும்ப உறுப்பினர்களிடம் இது பற்றி தகவல் தெரிவித்து விட்டு, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இது 

குறித்து தீபக் மற்றும் அவரது உறவினர் ஆனந்த் அமிர்ராஜ் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், அவர்கள் இருவரும் இளம் பெண் பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்யததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர்கள் இருவர் மீதும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவுப் படி, அவர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, சென்னையில் வீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர், வெளியே சொன்னால் திருட்டுப் பழி போடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.