பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் தொல்லை விவகாரத்தில், மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அடுத்தடுத்து 40 மாணவிகள் குற்றச்சாட்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கே.கே நகரில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், அந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த அசோக் நகர் மகளிர் 

போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலானை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அசோக் நகர் மகளிர் போலீசார் திட்டமிட்டனர். 

அத்துடன், ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணிற்குத் தகவல்களை அனுப்பும்படி தமிழக காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சுமார் 40 மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் வாட்ஸ்ஆப் மூலமாக, பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்ட அந்த நம்பருக்கு புகாராக அனுப்பி வைத்தனர். 

இந்த புகாரில், 15 மாணவிகள் தமிழகத்தின் பிற பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்கிற அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகி உள்ளன.

அந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை, தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்கு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி கூறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், “பத்மசேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு, அந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், ஆபாச மேசேஜ்களை அனுப்பியது குறித்து பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிந்தே நடந்ததா?” என்பது குறித்தும், பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் நேற்றைய தினம் சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம், “பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? புகாரின் உண்மை இருப்பது தெரிந்தும் பள்ளி நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் விட்டார்கள்?” உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கேள்விகளை போலீசார் அடுக்கடுக்காக கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், நேற்றைய தினம் புதன் கிழமை காலையில், பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறை உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி காலை 10.30 மணியளவில் ஆஜரான பள்ளி முதல்வரிடம், போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி, அவரிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்ற நிலையில், அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

குறிப்பாக, “பத்மசேஷாத்ரி பள்ளியில் நடந்து வரும் ஆன்லைன் வகுப்பிற்கு யார் கண்காணிப்பாளர்? பள்ளி ஆசிரியர் மீது ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்டு, பள்ளி முதல்வரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதாகவும்” கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் கைது செய்யப்பட்ட நாள் அன்று நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் 3 பேருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது காவல் துறையினருக்குத் தெரிய வந்தது. இதனால், இது தொடர்பாகவும் போலீசார் தங்களது விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கியமாக, “ஆன்லைன் வகுப்பை கண்காணிப்பது யார்? அதனை ஒருங்கிணைப்பது யார்? என்பது தொடர்பான விசாரணையையும் காவல் துறையினர் தற்போது தீவிரப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு, தற்போது விஸ்ரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த வழக்கு தற்போது அடுத்தடுத்து கிளை விரித்து பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டு வருவது, பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

“இந்த வழக்கில் இன்னும் அடுத்தடுத்து நிறையப் பேர் சிக்குபவர்கள் என்றும், அப்படி சிக்குபவர்கள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்களா?” என்ற கேள்வியும் தற்போது சமூக வலைத்தளங்களில் எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.