சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 2 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி, சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டூ பிளேசிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், ருத்ராஜ் 8 வந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தனர். 

ஒன் டவுன் சுரேஷ் ரெய்னா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. காரணம், ஒன் டவுனாக இந்த முறை களம் இறங்கியது மொயின் அலி. 

அதே போல், ருத்ராஜ் அவுட்டானதும், சின்னத் தல என்ட்ரி கொடுத்து அசத்தினர். அதன்படி, சுரேஷ் ரெய்னாவும், மொயின் அலியும் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய நிலையில், போக போக அதிரடி காட்டினார்கள். இதனால், மொயின் அலி 24 பந்துகளில் அதிரடியாக விளையாடி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின் களம் இறங்கிய ராயுடுவும் தன் பங்கிற்கு அதிரடி காட்டி, 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், ஜடேஜா களம் இறங்கி தனது ஸ்டைலில் விளையாடினார்.

அதே போல், போன ஐபிஎல் போட்டியில் களம் இறங்காமல், இந்த ஐபிஎல் போட்டியில் களம் கண்ட சுரேஷ் ரெய்னா மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அவற்றை பூர்த்தி செய்யும் விதமாக அவர் 36 பந்துகளில் அதிரடியாக ஆடி 54 ரன்கள் எடுத்திருந்த போது, எதிர்பாராமல் ரன் அவுட் ஆனார்.

இதனையடுத்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி களம் இறங்கிய வேகத்தில் 2 வது பந்தை அடித்து ஆட நினைத்து, டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். 

இறுதி நேரத்தில் சாம் கரன், ஜடேஜா இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில், சாம் கரன், கடைசி நேரத்தில் அதரடி காட்டினார். அப்போது, கரன் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்தது.

19 ஆவது ஓவரை வீச டாம் கரன் வந்தார். இந்த முறை அண்ணனின் பந்து வீச்சை ஒரு வழி செய்ய வேண்டும் என்று காத்திருந்த சாம் கரனுக்கு, முதல் பந்து ஒய்டாகவே போனது. மீண்டும் வீசப்பட்ட பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு தெறிக்கவிட்டார் சாம் கரன். அடுத்த பந்திலும் சிக்ஸர் அடித்து அசத்தினார். இது போதாது என்று 3 வது பந்தில் பவுண்டரி, கடைசி பந்தில் ஒரு ரன் என, இந்த ஓவரில் மட்டும் சென்னை அணிக்கு 23 ரன்கள் கிடைத்தது. சாம் கரன் இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசினார்.

இப்படியாக, சாம் கரன் அதிரடியை காட்ட சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா இருவரும் அற்புதமான தொடக்கத்தை கொடுத்து அசத்தினர். 

பவர் பிளேயின் முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை டெல்லி அணியினர் எடுத்தனர். தொடர்ந்து அவர்களின் ரன் வேட்டை எகிறியது. அத்துடன், 39 மற்றும் 47 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த பிரித்வி ஷா, அரைசதம் அடித்தார். தவான் தனது 42 வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர்கள் இருவருமே அரைசதம் அடித்து அதிரடி காட்டினார்கள். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் அப்படியே திணறிபோனார்கள். 

இப்படியாக, முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேகரித்த இந்த ஜோடியை ஒரு வழியாக வெய்ன் பிராவோ பிரித்தார். 38 பந்துகளை எதிர்கொண்ட பிரித்வி ஷா,  9 பவுண்டரி, 3 சிக்சர் என்று மொத்தம் 72 ரன்களை குவித்து, கேட்ச் ஆனார். 

தவான் தனது பங்கிற்கு 54 பந்துகளை எதிர்கொண்டு, 10 பவுண்டரி, 2 சிக்சர் என்று 85 ரன்களை விளாசி, எல்.பி.டபிள்யூ.வில் சிக்கி வெளியேறினார். ஆனாலும், டெல்லியின் வெற்றிப் பயணத்துக்கு எந்த தடையையும், சென்னை அணி போட தவறியது. இதனால், அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 14 ரன்னில் அவுட் ஆனார்.

இதனையடுத்து, களமிறங்கிய ரிஷப் பந்த், பவுண்டரி அடித்து டெல்லி அணியை வெற்றிப்பெற செய்தார். இதனால், டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிப் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில், ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

விருது பெறும்போது பேசிய தவான், “சென்னையின் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைன் ப்ளானை கணித்து ஆடியதாகக் கூறினார். ஏனென்றால், சென்னை அணி இதைத் தான் கடந்த சீசனிலும் செய்தது” என்றும், அவர் மேற்கோள் காட்டினார்.

அதே போல், சென்னை அணியில் முழுநேர ஸ்பின்னரே இல்லாமல் களமிறங்கியது ஒரு காரணம் என்றும், ரசிகர்கள் விமசர்னம் செய்துள்ளனர்.

இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை, தோல்வியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி, வரும் 16 தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.