சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி சீமானிடம், ’நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் என அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்லியிருக்கிறாரே?’ என செய்தியாளர்கள் கேட்க, அதற்கு சீமான் கிண்டலாக, ‘சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில் விஜய் உட்பட இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கிற எண்ணம் வரக் கூடாது’ என்று அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. 


சீமானின் இந்த கருத்தால் நடிகர் விஜயின் ரசிகர்கள் சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சீமானுக்கு எதிராக சுவரொட்டி ஒன்றை ஒட்டி இருக்கிறார்கள். அந்த சுவரொட்டில், ‘’ எங்கள் தளபதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது? அரசியலின் நடிகன் சீமானே.. என  ஒருமையில் விமர்சிக்கப்பட்டுள்ள சுவரொட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 நடிகர் விஜய் குறித்து சீமான் தனது கருத்துகளை மாற்றிக்கொண்டே தான் உள்ளார். காரணம் 2011 ஜுன் மாதத்தில் "என் தம்பி விஜய் நடத்திய மவுன புரட்சிதான் ஆட்சி மாற்றம் ஏற்படவே காரணமாக அமைந்தது!"  என்று பேசியிருந்தார். 

பின் ஜனவரி 2019ல் ,  “விஜய் மீது பெரிய மரியாதை வச்சிருந்தேன். ஆனால் அடிமை எடப்பாடிக்கெல்லாமாடா பயப்படறது?  ஒரு விரல் புரட்சியாம்..! .என்ன புரட்சி,  வறட்சி?. என் படத்துல நடிக்க மாட்டாரு. ஆனால், நான் பேசுறதை எல்லாம் பேசிக்கிட்டு மற்ற படங்களில் நடிப்பாரு!" என்றும் அதே 2019ல் ஆகஸ்ட் மாதத்தில், “தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன்!” என்று கூறினார். 

ஆனால் தற்போது  “ரஜினி, கமலுக்கு விழும் அடியில் விஜய் உட்பட எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வர தோன்றக்கூடாது!” என்று தெரிவித்து இருக்கிறார்.