திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு பலவிதமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், மிகவும் பிரசித்துப்பெற்ற தலமாகப் புகழ் பெற்று திகழ்கிறது.

108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாகத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. இப்புகழ்கள் மட்டுமின்றி ஸ்ரீபேயாழ்வார், ஸ்ரீதிருமழிசையாழ்வார், ஸ்ரீதிருமங்கையாழ்வார் ஆகிய எம்பெருமான்கள் இத்திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீபார்த்தசாரதி பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள் என்றும், புரணங்கள் கூறுகின்றன. 

இத்திருக்கோயிலில் மூலவர் அருள்மிகு வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை பிருத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக சேவை தருகிறார்.

இப்படிப்பட்ட புகழ்வாய்ந்த இந்த திருத்தலத்தில் நாளை யதினம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, இத்திருக்கோயிலில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 

- வைகுண்ட ஏகாதசி திருவிழாவான நாளைய தினம் காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை இலவச முன்பதிவு செய்த 3000 நபர்கள் திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாகத் திருக்குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள க்யூ வரிசையில் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

- மேற்கு கோபுர வாசல் வழியாக காலை 6.15 மணி முதல் இரவு 8.00 மணி வரை தெற்கு மாடவீதி வழியாக அமைக்கப்பட்டுள்ள க்யூ வரிசையில் 100 ரூபாய் காணிக்கை கட்டணச் சீட்டு அனுமதிக்கப்படும்.

- மேற்கு கோபுர வாசல், பேயாழ்வார் கோயில் தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள க்யூ வரிசையில், பரமபத வாசல் மட்டும் தரிசனம் செய்ய காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

- திருக்கோயிலின் உட்பகுதியில் அதிகாலை நடைபெறும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியினை சேவார்த்திகள் காண்பதற்காகத் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில், பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய LED Screen அமைக்கப்பட்டுள்ளது.

- திருக்கோயிலின் உட்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கண்காணிக்க 32 இடங்களில் அமைக்கப்பட்டு, திருக்கோயிலின் உட்பகுதியிலும், காவல் துறை கட்டுப்பாட்டு அறையிலும் கண்காணிக்கப்படுகிறது.

-  பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் கூடுதலாக இலவச கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

- திருக்கோயிலின் உள்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், மாட வீதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின்மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- சேவார்த்திகளின் வசதிக்காக க்யூ வரிசையில் நின்று தரிசனம் செய்ய ஏதுவாக தகரத்தினாலான மேற்கூரை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  முன்கோபுர வாசலில் எளிதாக சென்று தரிசனம் செய்து திரும்ப, மரத்தினாலான ரேம்ப் அமைக்கப்பட்டு உள்ளது.

- சேவார்த்திகள் எளிதில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

- கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.