பெட்ரோல், டீசல் விலையின் ஏற்ற இறக்கத்தால், திமுக - பாஜக மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைத்தது. 

அதனைத் தொடர்ந்து, “தமிழகத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடுத்த 72 மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால், கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்றும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக தெரிவித்தார்.

இது, தமிழக அரசியலில் பெரும் சூட்டை கிளப்பியது. இதனால், திமுகவும் இதற்கு எதிர்வினை ஆற்றி வருகிறது.

இது குறித்து, தூத்துக்குடிக்கு வந்திருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அண்ணமலையின் மிரட்டல் குறித்தும் கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா?” என்று, அனைத்து மாநிலங்களும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என்று, பதில் அளித்தார்.

அத்துடன், “தமிழகத்தில் தற்போதைய கொரோனா பரவல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இந்தியாவில் தெலுங்கானாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது என்றும், புதிய வகை ஒமிக்ரான் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டது என்றும், இப்போது அவர் நலமுடன் இருக்கிறார்” என்றும், குறிப்பிட்டார். 

“தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக இல்லை என்றும், யாரும் இனி பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், புதிய வகை தொற்று பரவவே இல்லை என்றும், அதே நேரத்தில் கொரோனா தொற்று தமிழகத்தில் 50 க்கு கீழாகவே உள்ளது” என்றும், கூறினார்.

இதனையடுத்து, “பெட்ரோல் - டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது போல் மாநில அரசும் குறைக்க முன்வர வேண்டும் என்றும், மாநில அரசும் வரியை குறைத்தால் தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அடி தரும் விதமாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, “பெட்ரோல், டீசல் விலையில் மத்திய - மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வரி மட்டுமே குறைப்பு என்றும், நேரடியாக மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் எந்த வரியையும் குறைக்கவில்லை என்றும், அதை மறைத்து, மறந்து அண்ணாமலை பேசி வருகிறார்” என்றும், அவர் பதிலடி கொடுத்து உள்ளார்.

அது போல், “தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய 28 ஆயிரம் கோடி ரூபாயை, அண்ணாமலையை வாங்கிதர சொல்லி கேட்டுக்கொள்கிறேன். அப்படி அண்ணாமலை செய்தால், அடுத்த நாளே தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல எரிபொருள் மீது 5 ரூபாயை மாநில அரசு குறைக்க சொல்லி கேட்போம்” என்று, அண்ணாமலைக்கு சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சரியான பதிலடி கொடுத்து உள்ளார்.

குறிப்பாக, “இலங்கை போன்று பதற்றமான சூழல் இந்தியாவில் இருப்பது உண்மை என்றும், 18 முறை பெட்ரோல் விலையை ஏற்றி 2 முறை குறைத்து விட்டு பாஜக சாதனையாக சொல்கிறார்கள்” என்றும், சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மேலும், “மத்திய அரசு உயர்த்திய செஸ் வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசின் தவறான கொள்கையால் பருத்தி விலை பல மடங்கு உயர்ந்துள்ளன” என்றும், அவர் கடுமையாக சாடி உள்ளார்.

கே. பாலகிருஷ்ணன், அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து, திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பலரும் தங்களது கருத்துக்களை பாஜகவுக்கு பதிலடியாக தொடர்ந்து கூறி வருவது, திமுக - பாஜக கருத்து மோதலை அதிகரித்து உள்ளது. இந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து, இடதுசாரிகள் மற்றும் விசிக இணைந்து தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளதும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.