தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் அடுத்தடுத்து டைரி, D-Block, தேஜாவு ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இதில் வருகிற ஜூலை 1ஆம் தேதி D-Block திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

முன்னதாக நடிகர் அருள்நிதியின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த திரைப்படம் டிமான்டி காலனி. இமைக்கா நொடிகள் மற்றும் சீயான் விக்ரமின் கோப்ரா ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முதல் திரைப்படமாக வெளிவந்த டிமான்ட்டி காலனி திரைப்படம் ஹாரர் த்ரில்லர் படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான டிமான்டி காலனி திரைப்படம் ரிலீஸாகி தற்போது 7 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் டிமான்டி காலனி திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் கதை மற்றும் திரைக்கதையில் உருவாகும் டிமான்டி காலனி பார்ட் 2 திரைப்படத்தை இயக்குனர் வெங்கடேஷ் வேணுகோபால் இயக்கவுள்ளார்.

இயக்குனர் வெங்கடேஷ் வேணுகோபால், கோப்ரா படத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டின் ஹாரர் திரில்லர் திரைப்படங்களான தி கான்ஜுரிங் சீரிஸ் படங்களின் பாணியில் டிமான்டி காலனி படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் வருகிற ஜூலை மாதம் டிமான்டி காலனி பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தற்போது அறிவித்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் இது குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். டிமான்டி காலனி 2 குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ…