தோல்விகளால் துவண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சிந்தன் ஷிவிர் எனும் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியானது, தற்போது மொத்தமாகவே 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 

குறிப்பாக, 403 தொகுதிகளைக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப் பெற்றதுடன், பஞ்சாப் மாநிலத்தில் தன் வசம் இருந்த ஆட்சியையு, ஆம் ஆத்மி கட்சியிடம் பறிக்கொடுத்தது.

இந்தியாவில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து வரிசையாக தொடர் தோல்விகளை அடைந்ததால், கடும் அதிர்ச்சி அடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில்சிபல், சசி தரூர், ராஜ் பப்பர் உள்ளிட்ட மிக முக்கிய 23 தலைவர்கள் “காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற வேண்டும்” என்று, வலியுறுத்தி சோனியாவுக்கு கடிதம் எழுதினர். 

அத்துடன், அந்த கடிதத்தில் “காங்கிரஸ் கட்சியின் அதிகாரக் குவியல் இல்லாமல், அனைத்து மட்டங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும்” என்றும், வலியுறுத்தி இருந்தனர்.

இதன் காரணமாகவே, கடந்த மார்ச் 14 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடி முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டது. 

இந்த ஆலோசனையின் போது, “ராகுல் காந்தி தலைவராக வேண்டும்” என்று, அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். 

என்றாலும், “காங்கிரஸ் கட்சிக்கு, சோனியா காந்தி தற்காலிக தலைவராக தொடர்வார்” என்றும், செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன் படியே, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு என்ற மாநாடு, இன்றைய தினம் தொடங்கி, அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 

அதாவது, காங்கிரஸ் கட்சியின் இப்படியான மாநாடு கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு, நடத்தப்படுகிறது.

அதன் படி, இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த மாநாடு தொடங்குகிறது. 

காங்கிரஸ் கட்சியின் இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 430 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொடக்க உரை ஆற்றுகிறார்.  அதன் தொடர்ச்சியாக, 15 ஆம் தேதி, ராகுல் காந்தி நிறைவுரை ஆற்றுகிறார்.

முக்கியமாக, இந்த 3 நாள் மாநாட்டில், “எதிர் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து, இந்த மாநாட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டு, புதிய புதிய வியூகம் வகுக்கப்படும்” என்றும், கூறப்படுகிறது.

மேலும், இந்த மாநாட்டில் இந்தியாவின் பொருளாதார நிலவரம், கொரோனா, வேளாண் பிரச்சினைகள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பொதுத்துறை பங்குகள் விற்பனை, காஷ்மீர் தொகுதி மறுவரையறை, மத்திய - மாநில உறவு நிலைகள், மத அடிப்படையில் வாக்காளர்கள் ஒன்று சேர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து” இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

மிக முக்கியமாக, “ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்” என்கிற புதிய திட்டத்தை காங்கிரஸ் கட்சியில் கொண்டு வந்து, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.