சின்ன பிரச்னைகளுக்குக்கூட ஆன்டிபயாட்டிக் ( Antibiotics) மருந்துகளைப் பயன்படுத்தினால் காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி படிப்படியாக குறைந்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் நோயின் தீவிரம் தெரியாமல் வீரியமான தெரியாமல் தாமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.


ஆன்டிபயாட்டிக் என்றால்?
மருத்துவத் துறையில் பெரும் புரட்சியாக கருதப்படுவது ஆன்டிபயாட்டிக். பாக்டீரியா  நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளே ஆன்டிபயாட்டிக். அதாவது, இயற்கையாக நம் உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தி செய்யவேண்டிய வேலையை, ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் செய்யும். 


 எத்தனை வகைகள் இருக்கிறது? 
ஆன்டிபயாடிக்கை மாத்திரைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உடலுக்குள் நுழைந்து நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கும் பணிகளைச் செய்யும் ஆன்டிபயாடிக், பாக்டீரிசைடல் (Bactericidal) ஒரு வைக. மற்றொரு வகை,  நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை மட்டும் தடுத்து நிறுத்தக்கூடிய ஆன்டிபயாட்டிக் பாக்டீரியோஸ்டேட்டிக் (Bacteriostatic).


யாருக்கு தேவை  ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள்?
ஆன்டிபயாட்டிக் மருந்து ஒருவருக்குத் தேவையா, இல்லையா என்பதை அறிய நோயாளியின் ரத்தம், சிறுநீர், புண் சீழ் போன்றவற்றில் உள்ள கிருமிகளை வளர்த்து, அவை எந்த மருந்துக்குக் கட்டுப்படுகின்றன என்று பரிசோதிக்கப்படும். பரிசோதனையின் முடிவில் வயது, உடல் எடை, நோய் பாதிப்பின் தன்மை ஏற்றாற் போல் மருந்துகளின் அளவு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும்.


அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது என்ன பிரச்சனை ஏற்படும்?
அதிகமாக இந்த மருந்துகளைச் சாப்பிடுவந்தால்  ஜீரண உறுப்புகள் கெட்டு, உடம்பிலுள்ள பி காம்ப்ளெக்ஸ் சக்தியில் இழப்பு ஏற்படும். நாவறட்சி, வாய் து‌ர்நாற்றம், தொண்டையில் புண் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. முக்கியமாக காலப்போக்கில் உட‌லி‌ன் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்புச் ச‌க்‌தி பா‌தி‌க்கப்படும்.


என்ன செய்ய வேண்டும்?
சுய மருத்துவம் கூடாது. எல்லாவிதமான நோய்களுக்கும் ஆன்டிபயாட்டிக் அவசியமில்லை. எதாவது நோய் பாதிப்பு ஏற்பட்டவுடன் ஆன்டிபயாட்டிக் மருந்து தேவையா என்று தெரிந்த பிறகே, அதைச் சாப்பிட வேண்டும். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எத்தனை நாள்களுக்குப்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோ அத்தனை நாள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பெரியவர்களுக்கு மட்டுமே கொடுக்கக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஒருபோதும் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது.


ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம் போன்ற  பழக்கவழக்கங்களை தொடர்ச்சியாக பின்பற்றும்போது இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.