தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, தமிழகத்தைக் காட்டிலும் அதிகளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது, தமிழக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

“சென்னையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், ஆனால் போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

அதே போல், “நமது நாட்டு மக்கள் உயிரிழக்கும் போது, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வது பெரும் குற்றச்செயலைத் தவிர வேறொன்றுமில்லை” என்றும், மத்திய அரசின் நடவடிக்கைக்குக் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மிக கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். 

அத்துடன், “கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தற்போது வரை, இந்தியாவிடம் எந்தவித செயல் திட்டமும் இல்லை” என்றும், ராகுல்காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி இருந்தார். 

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் “எங்கள் மாநிலத்தில் போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிறது என்றும் கூறி, மத்திய அரசு உடனே அனுப்பி வைக்க வேண்டும்” என்றும், தொடர்ந்து பிரதமர் மோடியை வலியுறுத்தி வந்தனர்.

ஆனாலும், மத்திய அரசு ஓரளவிற்கு ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை பல்வேறு மாநிலங்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது. எனினும், தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்தது என்றும், செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தன. 

நேற்று கூட, ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வந்த 7 கொரோனா நோயாளிகள் மரணமடைந்தனர். ஆக்சிஜன் விநியோகம் இல்லாததால் இவர்கள் உயிரிழந்ததாகப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். 

இந்நிலையில், “மே 7 ஆம் தேதி நிலவரப்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது” என்ற தகவலை மத்திய அரசு தற்போது வெளியிட்டு உள்ளது. 

அதன்படி, “7 கோடியே 62 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு, மே 7 ஆம் தேதி வரை 72 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருப்பது” தெரிய வந்திருக்கிறது. 

“ஆனால், தமிழகத்தைக் காட்டிலும் சற்று குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு, ஒரு கோடியே 39 லட்சம் டோஸ்கள் மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளதும்” இதன் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது.

இதே போல், “6 கோடியே 66 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கர்நாடகா மாநிலத்திற்கு, ஒரு கோடியே 6 லட்சம் தடுப்பூசி டோஸ்கள்” அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

“தமிழகத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் அதிகளவில் ஒதுக்கப்பட்டு இருப்பது” தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அத்துடன், “தமிழகத்தைக் காட்டிலும் சற்றே அதிகமாக மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு, தமிழகத்தைக் காட்டிலும் இரு மடங்கு தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டு உள்ளது” என்றும், மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் இந்த பாரபட்சமான அணுகுமுறைக்குத் தமிழக மக்கள் பலரும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் இது தொடர்பாக பெரும் விவாதம் கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.