ஜார்ஜ் ப்ளாய்டை நினைவுபடுத்தும் சம்பவம்.. சாமானியனிடம் ஒட்டுமொத்த பலத்தையும் காட்டி கொடூரமாகத் தாக்கிய போலீஸ்!
By Aruvi | Galatta | Apr 07, 2021, 02:53 pm
ஜார்ஜ் ப்ளாய்டை நினைவுபடுத்தும் சம்பவமாக இந்தியாவில் சாமானியன் ஒருவரிடம் போலீசார் இருவர் சேர்ந்து தங்களது ஒட்டுமொத்த பலத்தையும் காட்டி அவரை மிக கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் போலீஸ் விசாரணையின் போது கொல்லப்பட்ட கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
அமெரிக்காவை உலுக்கிய இந்த சம்பவமும், இது தொடர்பாக நடைபெற்ற போராட்டமும், உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, அது போன்ற ஒரு சம்பவம் தான், இந்தியாவில் தற்போது நடந்து, பொது மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுவதிருக்கிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி, நாட்டையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஆட்டோ டிரைவராக பணியாற்றும் 35 வயதான கிருஷ்ணா என்ற இளைஞர், உடல் நிலை சரியில்லாத தனது தந்தையை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.
அப்போது, அவர் அணிந்திருந்த மாஸ்கானது, மூக்கில் இருந்து சற்று நழுவி இருந்ததாகத் தெரிகிறது. அந்த நேரத்தில், அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து உள்ளனர்.
அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் காவல் நிலையம் வர மறுத்துள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அங்கு சோதனையில் ஈடுபட்ட போலீசார் இருவரும், அவரை பொது மக்கள் முன்னிலையில், நடு ரோட்டில் வைத்து கண்மூடித் தனமாக மிக கொடூரமான முறையில் தாக்கியதோடு, ரோட்டில் அவருடன் கட்டி புரண்டு உள்ளனர்.
இதனை, அங்கிருந்து மற்ற பொதுமக்கள் பலரும், தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனையடுத்து, இரு போலீசார் சேர்ந்து ஒரு சாமானியனை கொடூரமாகத் தாக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
அதன் படி, அந்த வீடியோவில், “சாலையில் கிடக்கும் ஆட்டோ டிரைவரை போலீசார் இருவரும் காலால் அழுத்திப் பிடித்திருக்கிறார்” இந்தக் காட்சியானது, அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்துவதாகப் பலரும் பதிவிட்டு, இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இப்படியாக, பொது மக்கள் பலரும் இணையத்தில் கொந்தளித்த நிலையில், இந்த சம்பவத்தை “ஜார்ஜ் ப்ளாய்டை நினைவுபடுத்தும் தாக்குதல் - 2” என்றும், கருத்து கூறினார்கள். இதனையடுத்து, சம்மந்தப்பட்ட போலீசார் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அப்பகுதி போலீசார், பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் கிருஷ்ணாவிடம் விசாரித்து உள்ளனர்.
அப்போது, “மருத்துவமனையில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் செல்லும் வழியில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் என்றும், அப்போது எனது முகத்தில் மாஸ்க் சற்று தவறியதாகவும், மாஸ்க் சற்று விலகி இருந்ததால், போலீசார் தன்னை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று, கட்டாயப்படுத்தியதாகவும், இதற்கு நான் மறுக்கவே அவர்கள் என் மீது கண்மூடித் தனமாகத் தாக்குதல் நடத்தினார்கள்” என்றும், அவர் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.
மேலும், கிருஷ்ணாவை தாக்கிய போலீசார் கமல் பிரஜபத், தர்மேந்திர ஜேட் என்பது தெரிய வந்துள்ளது. இந்த இரு போலீசாரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், ஆட்டோ டிரைவர் மீது கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.