“இந்தியாவில் 2 வது அலையாக கொரோனா வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் சில வாரக் காலம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்” என்று, அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி ஃபௌசி இந்திய அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2 வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் புதிய புதிய உச்சத்தைச் சந்தித்து வருகிறது. 

இதனால், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 4 லட்சம் எண்ணிக்கையை இன்று கடந்து நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 993 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்ந்திருக்கிறது.

இப்படியாக இந்தியா கொரோனாவின் கோர பிடியில் சிக்கி உள்ளதால், இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலை எதிர்கொள்ள பல்வேறு உலக நாடுகளும் நேச கரங்களை நீட்டி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து, ஆங்கில நாளிதழுக்கு அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரும், கொரோனா பெருந்தொற்று தடுப்பு நிபுணருமான அந்தோணி ஃபௌசி பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவர், “கொரோனா தொற்றில் இருந்து இந்திய அரசாங்கம் சில உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும், தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “இந்தியா, தற்போது கடுமையான மற்றும் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

மேலும், “இந்தியாவில் உடனடியாக நாடு முழுவதும் தற்காலிகமாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்” என்றும், அவர் ஆலோசனை கூறினார். 

“ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை உடனடியாக தேவையாக பெற்று, அதனை விநியோகிக்க வேண்டும்” என்றும், ஃபௌசி வலியுறுத்தினார்.

முக்கியமாக, “சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதை அடுத்து, அவர்கள் முழு ஊரடங்கைப் பிறப்பித்தனர் என்றும், இந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்கத் தேவையில்லை என்றும், கொரோனா பரவலை தடுக்க தற்காலிக ஊரடங்கைப் பிறப்பித்தாலே போதுமானது” என்றும், அவர் ஆலோசனை கூறினார். 

“மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியம் என்றும், சீனாவில் மருத்துவ தேவை அதிகரித்த சில நாட்களிலேயே அவர்கள் மருத்துவமனைகள், அவசர மையங்கள் ஆகியவற்றைக் கட்டி முடித்ததாகவும், அதே வழியை இந்தியா பின் பற்ற வேண்டும்” என்றும், அந்தோணி ஃபௌசி வலியுறுத்தி உள்ளார்.

“அரசாங்கத்தின் பல்வேறு துறைகளையும் மத்திய அரசு, அணி திரட்ட வேண்டும் என்றும், இந்த நேரத்தில் ராணுவத்தின் மூலம் நாம் என்ன உதவியைப் பெற முடியுமோ அதனை உடனே பெற வேண்டும்” என்றும், அவர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

அதே போல், “கொரோனா தொற்றில் இருந்து வெற்றி பெற்றுவிட்டோம் என இந்தியா மிகவும் முன்கூட்டியே அறிவித்து விட்டதாகவும்” அவர் விமர்சனம் செய்துள்ளார்.

அதே போல், ரஷ்யாவில் இருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் தற்போது இந்தியா வந்தடைந்து உள்ளது.

இதனிடையே, டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவர் உட்பட 8 பேர் தற்போத உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, குஜராத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கொரோனா நோயாளிகள் உட்பட 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.