“மது விருந்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டதாக” வீடியோ ஒன்று வைரலான நிலையில், “திருமண விழாவில் கலந்து கொள்வதில், நமது நாட்டில் குற்றம் ஒன்றும் இல்லை” என்று, காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்து உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, இரவு நேர விருந்து ஒன்றில் பங்கேற்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று காலை முதல் வைரல் ஆகி வருகிறது.

அதுவும், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப் ஒன்றில், நடைபெற்றதாக கூறப்படும் இந்த இரவு நேர விருந்தில் காங்கிரஸ் எம்.பி.  ராகுல் காந்தி கலந்துகொண்டதும், அவரை சுற்றி உள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகளும், வீடியோ ஒன்று உலா வந்துக்கொண்டிருந்தது. 

இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்மறையான கருத்துக்களை கூறி வந்தனர்.

அத்துடன், “காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து மிகப் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றும், இதன் காரணமாகவே, ராகுல் காந்தி நைட் கிளப் விருந்தில் கலந்து கொண்டிருப்பதாகவும், அதன் படியே இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளதாகவும்” சிலர் இணையத்தில் கிளப்பி விட்டனர். இந்நத விவகாரம், இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேசும் பொருளாகவே மாறிப்போனது.

ஆனால், “நேபாளத்தில் நடைபெற்ற குடும்ப நண்பரின் இல்லத் திருமண விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்வுதான் இந்த விருந்து” என்று, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. 

ஆனாலும், இந்த விகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை மிக கடுமையாக சாடி உள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “முழு நேர சுற்றுலாப் பயணி, பகுதி நேர அரசியல்வாதி,  பாசாங்குத்தனம் நிறைந்தவர்” என்று, மிக கடுமையாகவே விமர்சனம் செய்து உள்ளார்.

அத்துடன், “பயணம் முடிந்து நேரம் கிடைக்கும் போது, போலி கதைகளையும் - குற்றச்சாட்டுகளையும் உருவாக்கி, நாட்டு மக்களை தவறாக அவர் வழி நடத்த முயற்சிக்கிறார்” என்றும், மிக கடுமையாக சாடி உள்ளார்.

மேலும், “ராகுல் காந்தியின் இந்த செயல்பாடுகள், நம் நாட்டு மக்கள் மட்டுமில்லாமல், அவர் சார்ந்து உள்ள கட்சியினரையே தவறாக வழி நடத்துகிறது என்றும்,  ராகுல் காந்தி இதே பாதையில் சென்றால், அவரது கட்சியின் நிலைமை இப்படித் தான் இருக்கும்” என்றும், கடுமையான விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.

இந்த நிலையில் தான், இந்த சர்ச்சைக் குறித்து விளக்கம் அளித்து உள்ள காங்கிரஸ் கட்சி, “நமது நட்பு நாடான நேபாளத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அவரது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் என்றும், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பது நமது கலாசாரங்களில் ஒன்று” என்றும், காங்கிரஸ் கூறி உள்ளது.

குறிப்பாக, “திருமண விழாவில் கலந்து கொள்வதில் நமது நாட்டில் குற்றம் ஒன்றும் இல்லை” என்றும், காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்து உள்ளது.