சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் 18 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் செருவத்தூரில் மக்கள் அதிகம் வந்துசெல்லும் பேருந்து நிலையம் அருகே ஐடியல் ஸ்னாக்ஸ் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

அங்கு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் சமயத்தில் குறிப்பிட்ட இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம்.

அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு எப்போதும் போல அந்த கடையின் அருகில் உள்ள டியூஷன் சென்டரில் படிக்கும் மாணவர்கள் பலரும் அந்த கடையில் ஷவர்மா சாப்பிட்டு உள்ளனர். ஆனால், ஷவர்மா சாப்பிட்ட சுமார் பள்ளி மாணவர்கள் உட்பட 18 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உட்பட அனைவரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான செய்தி, அந்த மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், இது குறித்து விரைந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால், உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும்” என்கிற, முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அதன்படி, “அந்த கடையில் தயாரிக்கப்ட்ட தரமற்ற உணவை உட்கொண்டதால் 18 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இதில் அங்குள்ள கண்ணூர் மாவட்டம் கரிவாலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி தேவாநந்தா என்பவர் மட்டும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், அந்த கடையில் உணவு சாப்பிட்ட மேலும் பலரும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் அதற்காக மருத்துவமனைகள், படுக்கைகளை ஏற்பாடு செய்து வைத்து மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

எனினும், “ கெட்டுப்போன உணவை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாகவும்” மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 

இந்த சம்பவம் காரணமாக, அந்த கடை உடனடியாக அடைக்கப்பட்டது. 

இந்த சம்பத்தால், குறிப்பிட்ட அந்த கடையில் பணிபுரியும் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

மேலும், குறிப்பிட்ட அந்த கடையின் முதலாளியையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், அந்த கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 304, 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பாக, இந்த சம்பவத்தின் எதிரொலியாக அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். 

அதே போல், அந்த மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில், கடைகளில் உள்ள உணவின் தரம் மற்றும் கலப்படம் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.