தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராகவும் கலையின் மீது தீராத தாகம் கொண்ட ஆகச் சிறந்த கலைஞனாகவும் படத்திற்கு படம் சராசரியான திரைக்கலைஞர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நமது யோசனைகளுக்கு அப்பாற்பட்ட சோதனையான முயற்சிகளை மிகுந்த சிரத்தையோடு கையாண்டு ரசிகர்களுக்கு தொடர்ந்து வெரைட்டியில் விருந்து வைப்பவர் இயக்குனர் பார்த்திபன்.

முன்னதாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களின் மனதை வென்றது போலவே விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த சாதனை முயற்சியாக இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக சிங்கிள் ஷாட் நான்-லீனியர்(SINGLE SHOT - NON LINEAR) திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இரவின் நிழல் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சார்ந்தவர்களுக்கே இந்த சோதனை முயற்சி எப்படி சாத்தியமாகும் யோசனைகளை கிளப்பும் இரவின் நிழல் படத்தை சாத்தியமாக்கி சாதனை படைத்து விட்டார் பார்த்திபன். 

ஆமாம் ரிலீசுக்கு முன்பே இரவின் நிழல் திரைப்படம் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து இரவின் நிழல் படத்தின் சாதனைகளை பார்திபன் தொடங்கிவிட்டார்.

இயக்குனர் பார்த்திபனின் அசாத்திய சிந்தனையில் உருவாகியிருக்கும் இரவின் நிழல் படத்திற்கு கூடுதல் பலமாக இருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இரவின் நிழல் படத்தில் ஆஸ்கார் விருதுகள் பெற்ற SFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை(மே 1) இரவின் நிழல் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் அமர்ந்து மேடையில் இரவு நிழல் படம் குறித்து பார்த்திபன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் பாடலை வெளியிடும் சமயத்தில் திடீரென கோபத்தில் மேடையில் இருந்து இயக்குனர் பார்த்திபன் மைக்கை கீழே போட்டார். இச்சம்பவம் இயக்குனர் பார்த்திபன் மைக்கை வீசினார் என சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பார்த்திபன் மனம் திறந்து பேசியுள்ள வீடியோ தற்போது வெளியானது.

அந்த வீடியோவில், 

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் விழாவிற்கு வந்தபோது அவரை வரவேற்று அவருக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கினோம் அது மிகுந்த கணமாக இருந்தது அதனை தூக்கிகொண்டு மேடையின் முன்பக்கமாக வர நேர்ந்தது அப்படி முன்னால் வரும்பொழுது அதன் அதிக எடையால் எனது கையில் மிகுந்த வலி ஏற்பட்டது. தொடர்ந்து பாதத்திலும் உச்சந்தலையிலும் சிறு அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த விழாவின் மொத்த வேலைகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டு இழுத்துப்போட்டு அனைத்து வேலைகளையும் பரபரக்க நான் செய்து கொண்டிருந்த சமயத்தில் இது போன்ற அதிர்ச்சியினால் வந்த பதற்றத்தால் இப்படி நடந்தது. அதற்காக விழா முடிந்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் வாய்ஸ் மெசேஜ் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அதேபோல் நடிகர் ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டேன். திடீரென உடலில் ஏற்பட்ட அதிர்ச்சியால் நான் இவ்வாறு செய்த தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

என இயக்குனர் பார்த்திபன் கையில் கட்டுடன் பேசியுள்ளார். மேலும் இரவின் நிழல் படம் குறித்தும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் குறித்தும் பார்த்திபன் பேசியுள்ள அந்த முழு வீடியோ இதோ…