இந்திய அணிக்காக பேட்மின்டன் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடிவருபவர் பி.வி.சிந்து. உலக அளவில் மிகப் பிரபலமான பி.வி.சிந்து சர்வதேச அளவில் பெண்கள் பிரிவில் சில வருடங்களுக்கு முன் முதலிடத்தைக் கூட பிடித்திருந்தார். தற்போது, சர்வதேச அளவில் அவர் முதலிடத்தில் இருந்துவருகிறார். இந்தநிலையில், கொரோனாவை மையப்படுத்தி retire என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அவர் பதிவிட்டிருந்த ட்வீட் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு வைரலானது. அவர், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின

 

இதுதொடர்பாக பி.வி.சிந்து வெளியிட்ட அறிக்கையில், அவர் கூறியுள்ளதாவது:

 

``டென்மார்க் ஓபன் போட்டி தான் கடைசி. நான் ஓய்வு பெறுகிறேன்.

 

இதை எதிர்கொள்ள நான் தடுமாறுகிறேன். அதனால் தான் நான் முடித்துக்கொண்டுவிட்டேன் என இதைப் பற்றி நான் எழுதுகிறேன். இதைப் படித்து நீங்கள் அதிர்ச்சியடைந்தால் அது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால் இதை முழுவதும் படித்து முடிக்கும்போது என் கோணத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதற்கு நீங்களும் ஆதரவும் தருவீர்கள்.

 

இந்தக் கொரோனா தொற்று எனக்குப் புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. எதிராளிக்காக என்னால் கடுமையாகப் பயிற்சி பெற முடியும். ஆனால் இந்த வைரஸை எப்படித் தோற்கடிக்க முடியும்? பல மாதங்களாக வீட்டுக்குள் இருக்கிறோம். ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் பல கேள்விகளை எதிர்கொள்கிறோம். இந்தியாவுக்காக டென்மார்க் போட்டியில் என்னால் பங்கேற்க முடியவில்லை.

 

இந்நிலையிலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன். எதிர்மறைச் சிந்தனைகள், தொடர்ச்சியான பயம் போன்றவற்றிலிருந்து விலகவுள்ளேன். வைரஸ் தொடர்பான தவறான அணுகுமுறையிலிருந்து விலகவுள்ளேன். அனைவரும் ஒன்று சேர்ந்து வைரஸை விரட்ட வேண்டும். நம்முடைய முடிவு நம் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். 

 

டென்மார்க் ஓபன் போட்டி நடக்காவிட்டாலும் நான் பயிற்சி பெறுவதைத் தடுக்க முடியாது. போராடாமல் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். இந்தப் பயத்தை ஒழிக்காமல் விட மாட்டேன். பாதுகாப்பான உலகம் உருவாகும்வரை இதைத் தொடர்ந்து செய்வேன்" என்றார்.

 

இந்நிலையில் கொரோனா தொடர்பாக பி.வி. சிந்து வெளியிட்டுள்ள அறிக்கையின் ஆரம்ப வரிகள், `நான் ஓய்வு பெறுகிறேன்' என இருந்ததால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய அறிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து பி.வி. சிந்து ஓய்வு பெறுவதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல் அளித்தார்கள். எனினும் கொரோனா அச்சத்திலிருந்து மட்டுமே விலகுவதாக அறிவித்துள்ள சிந்து, கவனத்தை ஈர்ப்பதற்காகவே ஓய்வு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக சிந்துவின் தாயார் ஊடகங்களுக்கு அளித்த விளக்கவுரையில், `` ‘பி.வி.சிந்துவின் ட்வீட்டை ஊடகங்கள் முழுமையாக படிக்காமல் அவர், போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக செய்திகளை வெளியிட்டுவிட்டன. அவர், தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார். வரவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலும் பி.வி.சிந்து விளையாடுவார்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.