``கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் பல நாடுகளில் கால் பதித்துவிட்டது. 'உலகளாவிய பெருந்தொற்று' என்று WHO சொன்னது அசுர வேகத்தில் நிஜமாகிக் கொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் முதல்முறையாகக் `கட்டுப்படுத்தக்கூடிய உலகளாவிய பெருந்தொற்றாக' மாறியுள்ளது கொரோனா.

 

'இந்த வைரஸின் தயவில் நாம் இல்லை. இந்த விளையாட்டின் முக்கிய விதி Never give up" - கொரோனா பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதோனாம் கெப்ரேயேஸஸின் வார்த்தைகள் இவை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் இன்றுவரை ஒவ்வோர் நாளும் லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு, ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு என்று பதற வைத்துக் கொண்டிருக்கிறது. கூடவே, கொரோனா தாக்குதலுக்கும் அதற்கான சிகிச்சைகளுக்கும் இடையில் உலகம் முழுவதும் மனதை ஈரமாக்கும் பல சம்பவங்களும் நடந்துள்ளன.

 

இப்படியான சூழலில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் தற்போது பல்வேறு நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

 

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, உடன் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நபருடன் நான் தொடர்பில் இருந்ததால் சுய தனிமைப்படுத்தலில் உள்ளேன். ஆனால், எனக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. நலமாக இருக்கிறேன். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்.நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலுடன் இணங்குவது மிகவும் முக்கியமானதாகும். கொரோனா பரவுதலை உடைக்க வேண்டும். சக ஊழியர்களும் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், டெட்ராஸ் அதேனாம் தனிமையில் இருக்கிறார் என்பதும், அவருக்கு கொரோனா இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.