“பட்ஜெட்டில் கூடுதலஷாக எதற்கும் வரி விதிக்கக்கூடாது என்று, பிரதமர் மோடி எனக்கு தெளிவாக அறிவுறுத்தினார்” என்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மனம் திறந்து பேசி உள்ளார்.

2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 4 வது முறையாக நேற்றைய தினம் மக்களவையில் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில் சுமார் 1.30 மணி நேரம் மத்திய பட்ஜெட் 2022-2023 உரையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து நிறைவு செய்தார். 

குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பிலோ, வருமான வரி விதிப்பு அடுக்குகளிலோ எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. பழையபடியே, இனியும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, “2022-2023 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கும் - விவசாயிகளுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் இந்திய வேளாண் துறையை நவீனப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் அடங்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்” என்றும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புகழ்ந்து வருகின்றன.

ஆனால், “மத்திய அரசு தாக்கல் செய்த இந்த பட்ஜெட் பூஜ்ஜிய பட்ஜெட்” என்று, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர் கட்சிகள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தான், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ 'கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், கூடுதலாக எந்த வரியும் விதிக்க வேண்டாம்' என, பிரதமர் மோடி எனக்கு அறிவுறுத்தினார்” என்று, குறிப்பிட்டார்.

மேலும், “இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், வரியை அதிகரிக்க பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படியே, இந்த முறை பட்ஜெட் தயாரிக்கப்பட்டது” என்றும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.