சின்னத்திரையில் நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி, நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி வெற்றி பெற்று, அட்டகாசமான தொகுப்பாளராக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன் தற்போது வெள்ளித்திரையிலும் மக்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக வலம் வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப்.K.V இயக்கத்தில் #SK20 படத்திலும் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் #SK21 படத்திலும்  அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

மேலும் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சைன்ஸ்ஃபிக்ஸன் காமெடி படமாக தயாராகியுள்ள அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மார்ச் 25-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் & லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட், விஜய் டிவி சிவாங்கி, RJ விஜய் மற்றும் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கௌரவ தோற்றத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார்.

ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் முன்னதாக வெளிவந்த டான் படத்தின் ஐலபுல ஜங்கு பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய நிலையில் அடுத்த பாடலாக பே #BAE பாடல் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.