ஆவடி மாநகாராட்சியில் நரிக்குறவர் பெண் வேட்புமனு தாக்கல்!

ஆவடி மாநகாராட்சியில் நரிக்குறவர் பெண் வேட்புமனு தாக்கல்! - Daily news

ஆவடி மாநகராட்சியில் நரிக்குறவர் பெண் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

localbody election

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கு வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

அதனைத்தொடர்ந்து இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் பிப்ரவரி 4-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாலும், மிக குறுகிய இடைவெளியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதாலும் கூட்டணி கட்சிகள் இட ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை விரைந்து மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

இந்நிலையில் இடப்பங்கீட்டில் கூட்டணி கட்சிகள் இடையே இழுபறி நீடித்ததால் இடப்பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று வரை பிரதான கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. தி.மு.க. கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க., தங்களுக்கு போதிய இடங்களை ஒதுக்க அ.தி.மு.க. முன்வரவில்லை எனக்கூறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க. தனித்து களம் காண்கிறது. அதேபோன்று பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க., சமத்துவ மக்கள் கட்சி ஆகியவையும் தனித்து போட்டியிடுகின்றன.

மேலும் இதன் காரணமாக இந்த தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும், தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி உள்ளது. தேர்தலில் களம் காணும் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஏற்பட்ட தாமதம் காரணமாக வேட்பு மனு தாக்கல் ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது வந்தது. தொடர்ந்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்தது. இதன்காரணமாக கடந்த 2-ம் தேதி வரை 2,563 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று முன்தினம் ஓரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 590 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை மொத்தம் 10 ஆயிரத்து 153 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதன்காரணமாக தேர்தல் அலுவலகங்கள் களை கட்டின. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது உள்ளூர் பகுதியில் நடைபெறும் தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேச்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டதால் தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஆவடி மாநகராட்சியில் தி.மு.க, அ.தி.மு.க, ம.நீ.ம, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திருமுல்லைவாயல் ஜெயா நகரில் உள்ள நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் பெண் தனலட்சுமி கழுத்தில் மாலை அணிந்து தனது ஆதரவாளர்களுடன் நடனமாடி, பாட்டு பாடி மாநகராட்சிக்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.  அப்போது அவருடன் வந்த 50 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் பெண்கள் கையில் நரிக்குறவர் மக்களுக்கு பட்டா மற்றும் அடையாள அட்டை வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. ஜெய்பீம் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர். 
 

Leave a Comment