உத்திர பிரதேசம் மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்தியப்பிரதேச அரசும் கட்டாய மத மாற்றத்திற்கு தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் மத சுதந்திரம் (தர்ம ஸ்வதந்த்ரியா) மசோதா 2020 தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால்,  தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.  மதம் மாற்றப்பட்ட நபர் ஒரு பட்டியலின அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் அல்லது வயது குறைந்தவராக இருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 2 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் தனி நபரோ மற்றும் நிறுவனத்தைச் சார்ந்தவரோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்து இருக்கிறார்.