“நிலைமையை கணிக்கவில்லை, சரியான தலைமை இல்லை” என்று, ரகுராம் ராஜன் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனாவின் கொடிய அலை 2 முறையாக இந்தியா முழுவதும் வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான தொற்று பாதிப்புகளும், 100 க்கணக்கான உயிர் இழப்புகளையும் இந்தியா நாள்தோறும் சந்தித்து வருகிறது.

இதனால், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால், நாடு என்ன ஆகும், தற்போது என்ன செய்யப்போகிற என்று நாட்டு மக்கள் பலரும் தற்போது ஏங்கத் தொடங்கி உள்ளனர்.

இந்த சூழலை “கொரோனா பேரிடரை மத்திய அரசு சரியாக கணிக்கவில்லை என்றும், மத்திய அரசிடம் சரியான தொலை நோக்கு திட்டம் இல்லை என்றும், சரியான தலைமையும் இல்லை” என்றும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

இது தொடர்பாக புளூம்பெர்க் தொலைகாட்சிக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில், “கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்திருந்தாலே கொரோனா 2 ஆம் அலையை கணித்திருக்கலாம்” என்று, குறிப்பிட்டார். 

“ஆனால், அப்படி இந்தியா இருக்கவில்லை“ என்றும், ரகுராம் ராஜன் கவலைத் தெரிவித்தார்.

“சர்வதேச அளவில் என்ன நடக்கிறது என்பதை பார்த்திருந்தாலே இந்தியாவில் 2 வது கொரோனா என்னும் அலை குறித்து யூகித்திருக்க முடியும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், “பிரேசில் நாட்டில் கொரோனாவின் 2 ஆம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போது, அதனை கவனித்திருந்தால் மீண்டும் 2 ஆம் அலை வரும், அதன் தாக்கம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதை கணித்திருக்க முடியும்” என்றும், ரகுராம் ராஜன் குறிப்பிட்டு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “கடந்த ஆண்டு 2 ஆம் பாதியில், முதல் அலையின் வீரியம் குறையத் தொடங்கிய போது, அப்போது கொரோனா முடிவடைந்து விட்டது என்கிற மன நிறைவுக்கு நாம் சென்றுவிட்டோம் என்றும், அதன் காரணமாக பல சலுகைகளை வழங்கினோம்” என்றும், அவர் நினைவு கூர்ந்துள்ளார். 

“அதன் காரணமாகவே, தற்போது நாம் பெரும் சிக்கலில் சிக்கத் தவிக்கிறோம் என்றும், கொரோனாவின் முதல் அலை குறையத் தொடங்கியதால், தடுப்பூசியை வேகப்படுத்தும் பணியையும் குறைத்துக்கொண்டோம்” என்றும், அவர் கூறினார்.

“ஆனால், இந்தியாவில் தற்போது நிலைமை கைமீறி சென்று விட்டது என்றும், அதனால் அவசர நிலையில் இருக்கிறோம்” என்றும், அவர் தெரிவித்தார்.

“கொரோனாவையும் கட்டுப்படுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியையும் வேகப்படுத்த வேண்டும். இந்த 2 வேலையையும் ஒன்றாக செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்” என்றும், ரகுராம் ராஜன் மத்திய அரசின் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் வகையில் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.