நள்ளிரவு நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் 8 மாத கை குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்து உள்ள தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்த 62 வயதான பிரதாபன், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அத்துடன், இவர், அந்த பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அந்த வீட்டில் பிரதாபன் தனது 54 வயதான மனைவி செர்லி, 26 வயதான மூத்த மகன் அகில், 24 வயதான மருமகள் அபிராமி மற்றும் அவர்களது பெயர் வைக்காத 8 மாத கை பெண் குழந்தை ஆகியோருடன் அவர், வர்கலா நகரில் ஒன்றாக வசித்து வந்தார். 

இவர்கள், தங்களுக்கு சொந்தமான வீட்டில் இரண்டாவது மாடியில் வசித்து வருகிறார்கள். 

இந்த சூழலில் தான், பிரதாபன் வீட்டில் இருந்து இன்று அதிகாலை நேரத்தில் கரும்புகை வெளியாகி இருக்கிறது.

இதனையறிந்த, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது, அந்த வீட்டின் உள்ளே தீ கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வர்க்கலா போலீசாருக்கும், தீயணைப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

இது தொடர்பாக தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த வீட்டில் பற்றி எரிந்துக்கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

அதன் பிறகு, அந்த வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அந்த வீட்டில் பிரதாபன் அவரது மனைவி செர்லி, மகன் அகில், மருமகள் அபிராமி மற்றும் 8 மாத பச்சிளம் கை குழந்தை என 5 பேரும், அந்த தீயில் கருகிய நிலையில், பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்து உள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருவனந்தபுரம் மாவட்ட போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று அடுத்த கட்ட விசாரணைக்கு அதிரடியாக உத்தரவிட்டனர். இது தொடர்பாக, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அவர்களது செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

அதே நேரத்தில், இது திட்டமிட்ட செயலா? அல்லது இயற்கையாக நடந்த விபத்தா?” என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.