இந்திய இறையாண்மையை கேள்விகுறியாக்கும் வகையில், கர்நாடகா மாநிலத்தில் “இஸ்லாமியர்களிடம் பொருள் வாங்காதீர்கள்” என்று, சிலர் திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வர அதிரடியாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தடை சட்டபடியே நிறைவேற்ப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக, தற்பொது அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு சம்பவங்களும் நடப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையே வெடித்திருக்கிறது.

அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் கடலோர கர்நாடக மாவட்டங்களில் உள்ள கோயில்களில் கடைகள் நடத்த இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, “ஹலால் இறைச்சிகளை வாங்க கூடாது” என, சில இந்து அமைப்பினர் அதிரடியான பிரசாரத்தை முன்னெடுத்ததாகவும் செய்திகள் வெளியானது.

அதன் பிறகு, “கர்நாடகா மாநிலத்தில் பழ வியாபாரம் செய்யும் இஸ்லாமிய வியாபாரிகள், பழங்களில் எச்சில் துப்பி விற்பதாகவும், இதை புறக்கணிக்க வேண்டும்” என்று, சிலர் பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானது.

அதே நேரத்தில், “கர்நாடகா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் தொழுகைக்கு அழைக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக” சில இந்து அமைப்பினர் குரல் கொடுத்தனர். 

அத்துடன், “மசூதிகளில் தொழுகைக்கு அழைக்கும் ஒலிபெருக்கிக்கு தடை விதிக்காவிட்டால், இந்து கோயில்களில் போட்டிக்கு ஒலி பெருக்கிகள் மூலம் சாமி பாடல்கள் ஒலிக்க செய்யப்படும்” என்றும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த சில இந்து அமைப்பினர் பேசி வந்தனர். 

இதனையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தளங்களான மசூதிகளில்ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக, கர்நாடகா மாநிலத்தில் முதன் முதலில்  சிக்மங்களூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. 

அதன் தொடர்ச்சியாக, பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவில் பிற பகுதிகளிலும் மசூதிகள், சர்ச்கள், கோயில்களில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் ஸ்பீக்கர் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, “மசூதி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக” கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் கூறியுள்ளார்.

அதுவும், “கர்நாடகா ஐகோர்ட் அனுமதித்த அளவை விட, அதிக அளவு டெசிபல் கொண்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதாக” கூறி, மசூதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கியமாக, 49 வழிபாட்டு தளங்கள் மீது இப்படியாக வழக்கும் பதியப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக புகார் வந்த காரணத்தாலேயே இப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல், “இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும்” என்று, சிலர் கடுமையாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் பட்டுக்கூடு உற்பத்தி அதிகமாக உள்ள மாவட்டமாக கோலார் உள்ளது. அங்கு, மார்க்கெட்டில் பட்டுக்கூடுகளை இந்து வியாபாரிகளிடம் மட்டும் விற்க வேண்டும் என்று, சிலர் கூறி வருவதாகவும், இதனால் இத்தனை நாட்களாக இந்த தொழில் செய்து வந்த அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதால், இதனை எதிர்த்து உள்ளனர் என்றும், கூறப்படுகிறது.