தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீரமே வாகை சூடும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்தடுத்து ஆக்சன் த்ரில்லர் திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மூலம் முதல்முறை இயக்குனராகவும் அவதாரம் எடுக்கும் விஷால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.

மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திற்கு ஜீவி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பும் வருகிற மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் முன்னதாக நடிகர் விஷால் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் லத்தி. லத்தி திரைப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க, இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு லத்தி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அதிரடியான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…