தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்த பிளாக்பஸ்டர் திரைப்படமாக ரிலீசாகிறது பீஸ்ட் திரைப்படம். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ பீஸ்ட் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.  மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் அனிருத் இசை அமைத்துள்ளார். 

வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பீஸ்ட் திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. முன்னதாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தொடர்ந்து தளபதி விஜய் அடுத்து நடிக்கும் தளபதி66 திரைப்படத்தின் பட பூஜை நேற்று(ஏப்ரல் 6) நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்த் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இல்ல திருமண விழாவில் தளபதி விஜய் கலந்து கொண்டார். அதே சமயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

இந்த தருணத்தில் தளபதி விஜய் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருவரும் சந்தித்து கைகுலுக்கி பேசிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…