இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும், பல கோடி ரசிகர்களின் அபிமானம் பெற்ற ஃபேவரட் ஹீரோவாகவும், பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனாக விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பீஸ்ட். வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

முன்னதாக நேற்று ஏப்ரல் 6-ஆம் தேதி தளபதி விஜய் அடுத்து நடிக்கும் தளபதி66 படத்தின் படப் பூஜை கோலாகலமாக நடைபெற்றது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி66 படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, தமன்.S இசையமைக்கிறார்.

இந்நிலையில் தளபதி விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த அனைவருக்கும் விஜய் தரப்பிலிருந்து அன்புக் கட்டளையாக முக்கிய அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில்,

அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. இது நம் தளபதி விஜய் அவர்களின், கடுமையான உத்தரவின் பேரில், ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது, நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும், நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன். 

என தெரிவிக்கப்பட்டுள்ளது.