சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் இறந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று மாநில மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராம்குமாரின் உடலில் 4 சிராய்ப்பு காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையின் போது காயங்களே இல்லை என பிரேதப் பரிசோதனை மருத்துவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அதுவும் பட்டப்பகலில் மென்பொறியாளர் ஸ்வாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், ராம்குமார் என்ற இளைஞர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

அப்போது, சிறை வளாகத்தில் ராம்குமார் மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ராம்குமார் தந்தை பரமசிவம், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். 

இந்த வழக்கில், பிரேதப் பரிசோதனை மருத்துவர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிறை மருத்துவர் நவீன் ஆகியோர் நேற்று வாக்குமூலம் அளித்தனர்.

ராம்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் செல்வகுமாரிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்ற நிலையில், மற்றொரு மருத்துவரான பாலசுப்பிரமணியம், சிறை மருத்துவர் நவீன் குமார், சிறைக் கண்காணிப்பாளர் அன்பழகன், சிறைக் காவலர் ஜெயராமன் ஆகியோர் அப்போது விசாரணைக்கு ஆஜரானார்கள். அதன்படி, தங்களது தரப்பு விளக்கத்தையும் அவர்கள் அளித்தனர்.

அதன்படி, பிரேதப் பரிசோதனை செய் பாலசுப்ரமணியம் அளித்த வாக்குமூலத்தில், “ராம்குமார் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்திருக்கலாம்” என கூறினார்.

ஆனால், மருத்துவர் அப்துல் காதர், “ராம்குமார் உடலில் காயங்கள் இருப்பதாகத் தெரிவித்தது தெரியாது எனவும், சோதனை செய்த போது பிரேதத்தின் அத்தகைய காயங்கள் இல்லை” எனவும், பாலசுப்ரமணியம் கூறினார்.

குறிப்பாக, சிறை மருத்துவர் நவீன் குமார் அளித்த மருத்துவ சான்றிதழ்  அடிப்படையில், அவரிடம் குறுக்கு விசாரணையில் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அப்போது “ராம் குமார் சிறையிலேயே இறந்து போனாரா? என்பதை மையப்படுத்திக் குறுக்கு விசாரணை நடைபெற்றது” என்றும், ராம் குமார் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

முக்கியமாக, ராம்குமாரின் உடலில் 4 சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி சையது அப்துல் காதர், அப்போதே கூறியிருந்தார். இது, அந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், “காயங்கள் ஏதும் இல்லை எனவும், மேல் உதட்டில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறி தெரியவில்லை” என்றும், பிரேதப் பரிசோதனை டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறியிருந்தார். 

இதனால், ராம்குமார் மரணம் தொடர்பான விசாரணையில் அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 7 ஆம் தேதி ஒத்தி வைத்து மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

இதனால், ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடித்து உள்ளது.