திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

thiruvalluvar

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் தேதி திருவள்ளுவர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்' என்று கூறி அந்த காணொலியையும் பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்குறள் நாட்காட்டியை ஸ்டாலின் வெளியிட்டார்.  திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகத்தையும் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதனைத்தொடர்ந்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக தொழில்துறை மற்றும் தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.