உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்தாலும், அங்கு நடைபெறும் அரசியல் சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது வியப்பாகவும், சற்று அதிர்ச்சியாகவுமே உள்ளது.

பொதுவாகவே, அரசியல் களத்தில் எதிர் கட்சியில் இருப்பவர்கள் தான், ஆளும் கட்சியில் வந்து இணைவது வழக்கம். ஆனால், இந்த வழக்கத்திற்கு எல்லாம் புதிய விதியை எழுதிக்கொண்டிருக்கிறது உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசியல்.

அதாவது, உத்தரப் பிரதேச மாநில பாஜகவில் இருந்து தற்போது மொத்தமாக 8 எம்எல்ஏக்கள் விலகி உள்ளனர். 

இவர்கள் அனைவரும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதாவது மத்தியில் பாஜக தலைமையில் தான் ஆட்சி நடைபெற்று வருகிறது.

என்றாலும், உத்தரப் பிரதேசத்திலும் பாஜக தலைமையில் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வருகிறார். இவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த 2 அமைச்சர்கள் ஏற்கனவே நேற்றும் நேற்று முன் தினமும் ராஜினாமா செய்த நிலையில், இன்று மூன்றாவது மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்து உள்ளது பாஜகவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதவும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தரம் சிங் சைனி என்பவர் தான், தற்போது பாஜகவில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

தரம் சிங் சைனி, 4 முறை நாகுட் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். 

இவர், “பாஜகவில் இருந்து நான் ஒரு போதும் விலகமாட்டேன்” என்று, நேற்று தான் உறுதி அளித்தார். ஆனால், இன்று ஒரே நாளே கடந்திருக்கும் நிலையில், தரம் சிங் சைனி, இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் என்பவர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

அவரை தொடர்ந்து, 2 வது அமைச்சராக தாரா சிங் சவுகானும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த 2 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா குறித்து அளித்த விளக்கத்திலும், “பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் மீதான இந்த அரசின் அடக்கு முறை மற்றும் அணுகு முறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதாகவும், இதன் காரணமாகவே நாங்கள் மன வேதனை அடைந்து ராஜினாமா செய்வதாகவும்” அறிவித்தனர்.

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன்னதாக, யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து 2 இதர பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள் வரிசையாக இரண்டு நாட்கள் விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது, 3 வதாக மேலும் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அமைச்சர் பதவி விலகி உள்ளது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், பாஜகவில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் மொத்தமாக 8 எம்எல்ஏக்கள் பதவி விலகி உள்ளனர். 

பதவி விலகிய அனைவரும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் விரைவில் இணைய உள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி இந்திய அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதனிடையே, பாஜகவில் இருந்து ஒவ்வொரு அமைச்சர்கள் பதவி விலகும் போதும், அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, அவர்களுக்கு “பாராட்டுக்களும், வாழ்த்துக்களையும்” அவர் தெரிவித்து வருகிறார்.

இந்த நிகழ்வுகள் யாவும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.