“தேர்தல் தோல்விக்குப் பிறகு, நடிகர் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்” என்று, பிரதமர் நரேந்திர மோடி பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, கடந்த 10 ஆண்களுக்குப் பிறகு, ஆட்சியைப் பிடித்து உள்ளது. இந்த முறை தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, தமிழ்நாட்டில் கிட்டதட்ட 4 இடங்களில் வெற்றி பெற்றது.

இதில், முக்கியமாகக் கோவை தொகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்திக்க, நேற்றைய தினம் டெல்லி சென்றனர்.

அப்போது, பிரதமர் மோடி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனித்தனியே கருத்துக்களைக் கேட்டறிந்தார் என்று கூறப்படுகிறது. 

அதன் படி, தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தியைப் பார்த்ததும், பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார் என்றும் கூறப்படுகிறது.

பின்னர், “சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்துச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்” என்றும், பிரமர் மோடி அவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

அத்துடன், பிரதமர் மோடியுடன் 4 சட்டமன்ற உறுப்பினர்களும் கிட்டதட்ட 35 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

பாஜக தலைவர் எல்.முருகன் பிரதமருடன் பேசும் போது, “கோவை தெற்கு சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் சுட்டிக் காட்டி இவர் தான் கமல்ஹாசனை தோற்கடித்தவர்” என்று கூறியதாகவும், அதற்கு “வானதி சீனிவாசன் வெற்றிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்” என்றும் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, “தேர்தல் தோல்விக்குப் பிறகு, நடிகர் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்” என்று, பிரதமர் நரேந்திர மோடி பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பாஜக மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.