தமிழகம் முழுவதும் நாளை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்குகிறது. 

இந்தியா உட்பட உலக உலக நாடுகளில் கொரோனா தாக்கத்தின் 2 ஆம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. 

இதனால், தமிழகத்தில் பல்வேறு அடிப்படை பணிகளுக்கும் கிட்டதட்ட முழு தளர்வுகள் அளிக்கப்பட்டு, அதே நேரத்தில் ஊரடங்கு தற்போது மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் தொற்றானது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து உள்ளதால், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளை நேற்று முன் தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் படி, அனைத்து மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இதில், முதலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து கடந்த வாரமே செயல்பட்டுக்கு வந்தது. 
அதன் பிறகு, கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் நாளை முதல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்த மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது கிட்டதட்ட நீக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமக, தமிழகத்தில் நாளை முதல் முழு அளவில் பேருந்து சேவை பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் தொடங்கிறது. 

அதன் படி, ஒவ்வொரு மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து தொடங்கும் நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு பல அறிவுரைகளை வழங்கி உள்ளது. 

அந்த வழிக்காட்டு நெறிமுறைகளின் படி, பேருந்தில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றும், குளிர்சாதன பேருந்துகளை குளிர்சாதன வசதியின்றியே இயக்க வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.